காஞ்சிபுரம் | ரூ.4 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த காஞ்சி அண்ணா பல்கலை. ஊழியர் கைது

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் வைப்பு நிதியை வங்கியில் செலுத்தாமல் ரூ.3.80 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் பிரபு என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 4 துறைகளில் சுமார் 1,000 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவியர் தனித்தனியே தங்கி பயில்வதற்கு விடுதி வசதிகளும் உள்ளன.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளிடம் இருந்து எச்சரிக்கை வைப்பு நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகை பெறப்படும். அந்தத் தொகை தொகை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும். மாணவ, மாணவியர் 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு அந்த பணம் மீண்டும் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.

இந்த கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்ற ஊழியர் மாணவ, மாணவியர்களிடம் பெற்ற பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ மணவிகள் தொடர் புகாரை தெரிவித்ததை தொடர்ந்து, கல்லூரி முதல்வர் கவிதா, வங்கி கிளைக்கு சென்று விசாரித்தபோது வங்கி கணக்கில் ரூ.401 மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் பிற வங்கி கணக்குகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவற்றையும் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதில் கல்லூரியின் 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்டபோது, அவற்றிலும் சுமார் 3. 80 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதனை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபுவை வலைவீசி தேடி வந்தனர்.

காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த பிரபு தலைமறைவானார்.இந்த நிலையில் அவர் ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆந்திரா சென்ற போலீஸார் நேற்று முன்தினம் இரவு பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE