கட்டுமானப் பணியின்போது கிடைத்த பிரிட்டிஷ் கால தங்க காசுகளை பறித்து சென்ற 4 போலீஸார் மத்தியப் பிரதேசத்தில் கைது

By செய்திப்பிரிவு

இந்தூர்: கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் கண்டுபிடித்து பதுக்கிய தங்க காசு புதையலை, பறித்துச் சென்ற 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ராம்கு பாய்தியா மற்றும் அவரது மருமகள் பாஜரிஆகியோர் கட்டுமான தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் குழி தோண்டும் போது பூமிக்குள் தங்க காசு புதையல் கிடைத்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தை சேர்ந்த 240 தங்க காசுகள் பூமிக்கடியில் இருந்துள்ளன. அவற்றை மத்திய பிரதேச மாநிலம் சோண்டுவா பகுதியில் உள்ள தங்கள் வீட்டுக்கு ராம்கு பாய்தியாவும், பாஜரியும் எடுத்துச் சென்றனர். 20 தங்க காசுகளை எடுத்துக் கொண்டு, மீதி காசுகளை வீட்டுக்குள் புதைத்து வைத்தனர். இவர்களுக்கு தங்க புதையல் கிடைத்த விஷயம் கிராமத்தில் பரவியது. இது போலீஸாரின் காதுகளுக்கும் எட்டியது.

கடந்த ஜூலை 19-ம் தேதி, ராம்கு பாய்தியா வீட்டுக்கு போலீஸார் 4 பேர் சீருடை இல்லாமல் வந்து, தங்க புதையல் குறித்துவிசாரணை நடத்தினர். பழங்குடியின தொழிலாளர்களை போலீஸார் மிரட்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 239 தங்க காசுகளை எடுத்துச் சென்றனர். ஒரே ஒரு தங்க காசு மட்டும் ராம்குவிடம் இருந்துள்ளது.

இதுகுறித்து மறுநாள் ராம்கு பாய்தியா போலீஸில் புகார் அளித்தார். இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு எட்டியது. தங்க காசுகளை பறித்துச் சென்ற இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸார் அலிராஜ்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்க காசுகள் இன்னும் மீட்கப்படவில்லை. ராம்கு பாய்தியாவிடம் இருந்த ஒரு தங்க காசு, இந்தூரில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE