நண்பரின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் டெல்லி அரசு அதிகாரி கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டச் சிறுமி டெல்லியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி பிரேமோதய் ஹாக்கா என்பவரின் இல்லத்தில் வசித்து வந்திருக்கிறார். அவர் டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குநராக பணியற்றியுள்ளார். சிறுமியின் பாதுகாவலர் என்ற போர்வையில் இருந்துகொண்டே சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகளை பிரேமோதய் ஹாக்கா செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. சிறுமியை அவர் கடந்த 2000 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆலோசனை வழங்கிய டெல்லி மருத்துவனை மனநல மருத்துவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தக் கொடூரம் வெளியுலகத்துக்கு தெரிவந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர், அவரது மனைவி மீது டெல்லி போலீஸார், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவான கிரிமினல் குற்றம், சதி, மிரட்டல், அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவுகளுடன், உடனடி கைதுக்கு வழிவகுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேமோதயின் மனைவி, சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க மருந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த துஷ்பிரயோகம் மற்றும் கைதுக்கான தாமதம் குறித்து திங்கள்கிழமை மாலை 5 மணிககுள் அறிக்கை சமர்பிக்கும்படி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரிடம் முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "இந்த கொடூரமான சம்பவம் மனிதகுலத்துக்கு மிகவும் அவமானகரமானதாகும். இதற்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல்வர் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியிடைநீக்கம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் கட்டாயம் வழங்குவோம்" என்றார்.

இந்தச் சம்பவத்தில் கைது நடவடிக்கை ஏன் தாமதமாகிறது என்று கேட்டு டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மகள்களைப் பாதுகாப்பாளர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால், குழந்தைகள் எங்குதான் செல்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி இணை ஆணையர் சாகர் கால்சி கூறுகையில், "பாதிக்கப்பட்ட குழந்தை இன்னும் அதிச்சியில் இருந்து மீளவில்லை. அவர் இன்னும் அழுத்தத்தில் தான் இருக்கிறார். அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் கொடுக்கப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

பெயர் கூறவிரும்பாத மற்றொரு போலீஸ் அதிகாரி கூறுகையில்,"சிறுமி இன்னும் சிகிச்சையில்தான் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவர் இன்னும் 14 நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு அவர் வாக்குமூலம் கொடுத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இன்று வாக்குமூலம் பெற முடியுமா என்று முயன்று வருகிறோம். இதற்கிடையில், குற்றவாளியின் வீட்டில் போலீஸ் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி நல வாரிய அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ள பிரேமோதய் ஹாக்கா, குழந்தைகளின் மறுவாழ்வினை கண்காணிக்கும் சிறார் நீதிவாரியத்தின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE