”காசு இருப்பவன் மட்டும்தான் நீட் படிக்க முடியுமா?” - நண்பனை இழந்த சென்னை மருத்துவ மாணவர் ஆவேசம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அன்றைய தினம் அவரது நண்பர் ஒரு ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் அந்த மாணவர் ஜெதீஸ்வரனின் மரணத்தை சுட்டிக்காட்டி நீட் தேர்வை விமர்சித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர், "நான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் தான் பெற்றேன். என் தந்தைக்கு வசதி இருந்ததால் அவர் ரூ.25 லட்சம் பணம் கட்டி என்னை ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார். இதுதான் மிகப் பெரிய முரண். காசு இருப்பவன் தான் டாக்டராக முடியும் என்றால் அவன் டாக்டரானதும் போட்ட காசை எடுக்கப்பார்ப்பானா இல்லை மக்களுக்கு சேவை செய்வானா? நீட் தான் மருத்துவர்களை உருவாக்கும் உண்மையான தேர்வு என்றால் இப்போது இருக்கும் மருத்துவர்கள் எல்லோரும் டுபாக்கூர் எனக் கூறுகிறீர்களா?

என் நண்பன் ஜெகதீஸ் என்னைவிட நன்றாகப் படிப்பவன். அவனுக்குப் பணமில்லை என்பதால் அவன் மருத்துவராக முடியவில்லை. எனக்கு அது வருத்தமாக இருக்கிறது. பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் எல்லாமே இருக்கிறது. 400 மார்க் எடுத்தவனால் மருத்துவராக முடியவில்லை. எதுக்குத்தான் இந்த நீட். இதை வைத்து இந்த மத்திய அரசு என்னதான் சாதிக்கப்போகிறது. நீட் தற்கொலை எங்கெங்கோ கேட்டோம். அதிர்ச்சியாகவில்லை. ஆனால் இப்போது எங்கள் நண்பர் ஜெகதீஸ் போனபின்னர் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு.

என் நண்பன் மக்கள் பணி செய்யவே நீட் எழுதினான். 2 வருடங்கள் எழுதி சீட் கிடைக்கவில்லை. 3வது முறை எழுதும்போது அப்பாவுக்காக டாக்டராக வேண்டும் என்றான். அவனுக்கு வெளிநாட்டுக் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அவனுக்கு தமிழகத்தில் பயின்று தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எண்ணம். ரெண்டு நாட்கள் முன்னர் எனக்குப் பேசிய ஜெகதீஸ், மச்சான் உனக்குக் கிடைத்த வாய்ப்பு இங்க நிறைய பேருக்குக் கிடைக்காது. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய் என்றான். மக்கள் பணி மனநிலை கொண்ட மாணவர் இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

நான் நீட் ஜஸ்ட் குவாலிஃபைட். எங்க அப்பாவால காசு கொடுக்க முடிந்த ஒரே காரணத்தால் தான் நான் மருத்துவ மாணவராகியுள்ளேன். ஆனால் என்னைவிட நன்றாகப் படிக்கும் ஜெகதீஸ் மருத்துவம் படிக்க முடியவில்லை. நான் இந்த சீட்டுக்கு தகுதியானவன் இல்லை. ஜெகதீஸ் போன்றவர்களால்தான் எனக்கு மக்கள் பணி எண்ணமே வந்தது. இங்க கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல் காசு போட்டதால் காசு பார்க்கிறானா? இல்லை காசு பார்ப்பதற்காக காசு போடுறானா என்பதே புரியமாட்டேங்குது.

ஒரு தனியார் கார்ப்பரேட் பள்ளியில் படித்த எங்களாலே முடியவில்லை என்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்றே தெரியவில்லை. இப்போது ஒரு மாணவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியுள்ளார். அவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கே ரூ.15 லட்சம் செலவழித்துள்ளார். மருத்துவப் படிப்புக்கு ரூ.1.5 கோடி போட்டுவிட்டு மருத்துவராக வருபவருக்கு மக்கள் பணியில் எப்படி நாட்டம் செல்லும். போட்ட காசை எடுக்கத்தானே யோசனை போகும். அப்படியென்றால் எதிர்கால சுகாதார சேவை கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

தந்தை, மகன் தற்கொலை: சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.

ஜெகதீஸ்வரன்(இடது), செல்வசேகர் (வலது)

சென்னை - குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலைக் கைப்பற்றி சிட்லப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE