தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி ரூ.92,000 பணம் பறித்த முன்னாள் ஊர்காவல் படை வீரர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை முகப்பேரை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த மாதம் 27-ம் தேதி ஒரு பெண்ணுடன், அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒருவர், போலீஸ் என கூறி, அந்த இளைஞரை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் ரூ.15 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு, விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையம் வர வேண்டும் என கூறி சென்றுள்ளார். இதையடுத்து, மறுநாள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என அந்த இளைஞரை மிரட்டி, மீண்டும் ரூ.65 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.

பின்னர், இதேபோல் ரூ.12,500 பணமும், 4 பவுன் மோதிரத்தையும் கடந்த 2-ம் தேதி மிரட்டி வாங்கியுள்ளார். தொடர்ந்து மிரட்டி வந்ததால், ஒரு கட்டத்தில் அந்த இளைஞர், சூளைமேடு போலீஸில் இது குறித்து புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபர் தியாகராய நகர் முத்துரங்கம் சாலை பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான பாலாஜி (28) என்பதும், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஊர்காவல் படை வீரராக பணியாற்றியதும் தெரியவந்தது. ஏற்கெனவே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும், இதே போன்று தங்கும் விடுதிக்கு பெண்களை அழைத்து செல்லும் ஆண்களை குறி வைத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE