முதலீடு செய்து ஏமாந்தவர்கள் ஆத்திரம்: ஜாமீனில் வெளியே வந்த ஆருத்ரா நிறுவன மேலாளர் கடத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனக் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது.

இதை உண்மை என நம்பி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்கள் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து ஏமாந்தனர். இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து, இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரைக் கைது செய்துள்ளனர்.

அந்த வகையில் அமைந்தகரை கிளையின் மேலாளராக பணிபுரிந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, கோயம்பேட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி 15 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் பிணை கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மதியம் கோயம்பேடு, சேமாத்தம்மன் நகரில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று செந்தில்குமார் மீது திடீர் தாக்குதல் நடத்தி, அவரை கடத்திச் சென்றது. பின்னர், செந்தில்குமாரின் தாய் கலாவை தொடர்பு கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்தால், மகனை உயிரோடு விட்டு விடுகிறோம். இல்லை என்றால் கொலை செய்து நீர்நிலைகளில் வீசிவிடுவோம் என மிரட்டியது.

அதிர்ச்சி அடைந்த கலா இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதை அறிந்த கடத்தல் கும்பல், 2 நாட்களுக்குப் பிறகு 30-ம் தேதி இரவு செந்தில்குமாரை போரூர் சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டுத் தப்பியது.

இந்நிலையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் செந்தில் குமாரை கடத்தியது அம்பத்தூர் விநாயகபுரம் அஜித்குமார் (27), சீனிவாசா நகர் செல்வம் (38), பாலாஜி (27), வெங்கடேசன் நகர் மணிகண்டன் (27), விக்னேஷ் (25), லட்சுமி அம்மன் நகர் சரவணன் (27), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (31) ஆகிய 7 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தல் குறித்து போலீஸார் கூறியதாவது: கடத்தப்பட்ட செந்தில்குமார், ஆருத்ரா நிதி நிறுவனத்தின் அமைந்தகரை கிளையின் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, தற்போது கைது செய்யப்பட்ட செல்வம், மணிகண்டன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் செந்தில்குமார் கூறியதை நம்பி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் முறையே ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் முதலீடு செய்துள்ளனர்.

பின்னர் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் குமாரை கைது செய்துள்ளனர். நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதை அறிந்த செல்வம், மணிகண்டன், விக்னேஷ் ஆகியோர் மீதமுள்ள 4 பேருடன் சேர்ந்து செந்தில்குமாரை கடத்தி அவர் தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என்று தெரிவித்தனர். புகார் அளிக்கப்பட்ட 7 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE