உறவினர்களை கொலை செய்து நகைகளை திருடியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செலவுக்கு பணம் தராததால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அக்கா மற்றும் ஆசிரியரான அக்கா கணவரை கொலை செய்த தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சவுண்டியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சோலைமலை. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு குழந்தை இல்லை. சோலைமலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சரோஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சரோஜாவின் தம்பியான திருவாரூர் மாவட்டம் மருதுபட்டிணம் பகுதியை சேர்ந்த துரையரசன்(52) என்பவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது அக்கா சரோஜாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். அதற்கு சரோஜா பணம் தர மறுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த துரையரசன் பணம் கேட்டு சரோஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பணம் தர மறுத்ததால் சரோஜாவையும், அவரது கணவர் சோலைமலையையும் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு துரையரசன் கொலை செய்துவிட்டு, சரோஜா அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி சென்றார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து துரையரசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் துரையரசனுக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE