பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர், இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கடை வீதியில் ஏராளமான நகைக் கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. நேற்று முன்தினம் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட பகல் நேரத்தில், கடை வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நகை பறிக்க முயன்றனர்.

இதில், நிலைதடுமாறி அந்த பெண் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். இது குறித்த சி.சி.டி.வி காட்சி பதிவுகள், சமூக வலைதளங்களில் வைரலாகியது. கிழக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி நகரம் முழுவதும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் தனியார் கல்லூரி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், மையத்தடுப்பில் மோதி விபத்துக் குள்ளாகி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் சென்று பார்த்தபோது இருவரும் இறந்துகிடந்தனர்.

இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, கடை வீதியில் பெண்ணிடம் நகை பறிப்பு முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருச்சி மண்ணச்ச நல்லூர், பழநி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கரடி கூட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. இருவரும் பழநி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கு சம்பந்தமாக கைதாகி சில நாட்களாக செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தனர்.

இவர்கள் கடந்த 6-ம் தேதி அங்கிருந்து தப்பித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து, இருசக்கர வாகனங்களில் சென்று நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பறித்து செல்லும் நகைகளை கேரளா மாநிலம் பாலக்காடு சென்று விற்று செலவு செய்து வந்துள்ளனர். பொள்ளாச்சி கடை வீதியில் நேற்று முன்தினம் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளனர்.

அதன்பின், பாலக்காடு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, பாலக்காடு சாலையிலுள்ள மேம்பால தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE