திருப்பத்தூர் | புதைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு பிறகு சிசுவின் உடல் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (32). தனியார் நிதி நிறுவன ஊழியர்.

இவர், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதில், அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மனோஜ் குமார் மறுத்ததால் மனமுடைந்த இளம் பெண் கடந்த மாதம் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையறிந்த பெற்றோர், அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்து விட்டதாக தெரிவித்து, குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். உயிரிழந்த சிசுவை இளம் பெண்ணின் குடும்பத்தார் அடக்கம் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வந்த இளம்பெண் வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மனோஜ் குமாரை கடந்த மாதம் கைது செய்தனர். விசாரணையில், காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் சிசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்த மகளிர் காவல் துறையினர் வாணியம்பாடி வருவாய்த் துறையினர் முன்னிலையில் நேற்று மயானப் பகுதிக்கு சென்று அங்கு கடந்த மாதம் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர். சிசு புதைக்கப்பட்டது கடந்த மாதம் என்பதால் எலும்புகள் மட்டுமே இருந்தன. அதனை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டி.என்.ஏ முடிவுகள் வந்த பிறகு இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE