கேரளாவில் நண்பர் உருவத்தில் வாட்ஸ்-அப்பில் அழைத்தவரிடம் ரூ.40 ஆயிரம் இழந்த நபர்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மோசடி

By செய்திப்பிரிவு

கோழிக்கோடு: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி வீடியோ அழைப்பு மூலம் நண்பர் உருவம் மற்றும் குரலில் பேசி, கேரள நபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வாட்ஸ் அப்-ல் தெரியாத எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசும்போது அவருடன் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நண்பரின் உருவம் தெரிந்தது. அவர் மருத்துவமனையிலில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு உதவ வேண்டியுள்ளதால் ரூ.40,000 கூகுள் பே மூலம் அனுப்பும்படி கூறியுள்ளார். அந்த குரலும், அவரது நண்பர் குரல் போல் அப்படியே இருந்தது.

இதனால் அவர் கூறிய எண்ணுக்கு ரூ.40,000 அனுப்பினார். மீண்டும் அதே உருவத்தில் வந்த வீடியோ அழைப்பில் பேசியவர் மேலும் ரூ.30,000 அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த ராதாகிருஷ்ணன் சைபர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.

அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் குரலில் மோசடி நபர்கள், இந்த புதுவித மோசடியில் இறங்கியுள்ளது தெரிந்தது.

சீனாவில் கடந்த மே மாதம் இதேபோன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நண்பரின் உருவத்துடன் கூடிய வீடியோ கால் மூலம் 4.3 மில்லியன் யுவான் (6,22,000 அமெரிக்க டாலர்) பணம் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை: தற்போது மோசடியில் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்துவதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி நிபுணர்கள் கூறியுள்ளனர். தெரியாத எண்ணில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் உருவத்தில் வீடியோ அழைப்பு வந்தால், அவர்களுடைய உண்மையான போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்கள்தான் பேசினார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் வரும் போலி வீடியோக்களை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான வீடியோக்கள் தெளிவு இல்லாமல் இருக்கும். சிறிது நேரத்தில் நின்றுவிடும். அப்போதே அது போலி என கண்டுபிடித்துவிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE