பெரியகுளம் எம்எல்ஏவுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்தவரை ராஜஸ்தானில் கைது செய்த தேனி போலீஸ்

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமாருக்கு வீடியோ கால் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறிப்பில் ஈடுபட்டவரை ராஜஸ்தானில் தேனி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார். இவருக்கு கடந்த 1-ம் தேதி வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்தது. அதில் ஒரு பெண் ஆபாச உடையுடன் பேசி உள்ளார். சிறிது நேரத்தில் சரவணக்குமார் அந்த அழைப்பை துண்டித்துள்ளார். பின்பு அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு பதிவு வந்துள்ளது. இதில், எம்எல்ஏ.வுடன் பெண் ஒருவர் ஆபாசமாக இருப்பது போன்ற சித்தரிப்பு வீடியோ இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவரிடம் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. தராவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர். இரண்டு முறை தலா ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபடுவதை அறிந்த அவர் தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆய்வாளர் ரங்கநாயகி தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் வீடியோ கால் வந்த தொலைபேசி எண், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் எம்எல்ஏவை மிரட்டிய கும்பலின் தொலைபேசி எண் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ரங்கநாயகி தலைமையிலான தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர்.

ராஜஸ்தானில் உள்ளூர் போலீஸாருடன் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அல்வார் மாவட்டம் கோவிந்த்கர்க் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் (34) என்பவர் மிரட்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் அவரை கைது செய்தனர். தற்போது ராஜஸ்தானில் இருந்து தேனிக்கு விசாரணைக்காக அவரை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

போலீஸார் கூறுகையில், “ஏடிஎம்.மோசடியில் ஈடுபட்டு வந்த அர்ஷத் தற்போது ஆபாச வீடியோக்களை உருவாக்கி பணம் பறித்து வந்துள்ளார். அதிக நேரம் ஆபாச வலைதளங்களில் நேரத்தை செலவிடுபவர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் வீடியோகாலில் பேசுகின்றனர். பதிலளிக்கும்போது ஃபேஸ் ரிக்கார்டர் மூலம் அவர்களின் முகங்களை பதிவு செய்து வீடியோக்களை உருவாக்கி மிரட்டுகின்றனர். விசாரணைக்குப் பிறகு மேலும் விவரங்கள் தெரியவரும்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE