செம்மரக் கடத்தல் | தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது: ஆந்திர காவல்துறை தகவல்

By செய்திப்பிரிவு

ஆந்திரா: ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில செம்மரக் கடத்தல் பிரிவு எஸ்.பி முரளிதர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் பிரிவு கண்காணிப்பாளர் முரளிதர் கூறியது: "சனிக்கிழமை இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னமயா மாவட்டத்தில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அன்னமயா மாவட்ட வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சித்தூர் மாவட்டத்தில், செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற 5 தமிழர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 19 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். இந்த தேடுதல் வேட்டையின்போது தப்பியோடியவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE