வாங்கிய கடனை திருப்பி செலுத்த நகை கொள்ளையடித்த உ.பி. இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நகை கொள்ளையில் ஈடுபட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் கவுசல்யா (61). மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். 5 மாடி கொண்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் கவுசல்யா பணிபுரியும் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் வழக்கம் போல் அவர், பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக மாடியிலிருந்து இறங்கி கீழே வந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கவுசல்யாவின் தலை முடியைப் பிடித்து சுவரில் மோதச் செய்து கீழே தள்ளி அவரை நிலைகுலையச் செய்தார். பின்னர், கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கவுசல்யா பணியாற்றும் அதே நிறுவனத்தில் டெலிவரி பாயாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த விபில் குமார் மிஸ்ரா (28) என்பவர் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

கைதான மிஸ்ரா கொள்ளையில் ஈடுபட்டது குறித்து போலீஸாரிடம் கூறியதாவது: என்னுடைய சொந்த ஊரில் எனக்கு அதிகளவு கடன் உள்ளது. 13-ம் தேதி (நேற்று) சொந்த ஊருக்கு புறப்படத் திட்டமிட்டு இருந்தேன். இதற்காக நண்பர்களிடம் கடனாக பணம் கேட்டேன். யாரும் பணம் தரவில்லை. சொந்த ஊருக்கு சென்றால் கடன்காரர்கள் தொந்தரவு செய்வார்கள்.

எனவே, எனது நிறுவனத்திலேயே பணியாற்றும் மூதாட்டி கவுசல்யாவை தாக்கி நகையைப் பறித்தேன். அந்த நகையை விற்றுக் கிடைக்கும் பணத்தில் சொந்த ஊர் சென்று கடனை அடைக்கத் திட்டமிட்டேன். ஆனால், அதற்குள் போலீஸார் என்னைக் கைது செய்துவிட்டனர் என மிஸ்ரா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE