‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் இயக்குநர், முகவர் மதுரையில் கைது

By என். சன்னாசி

மதுரை: ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவன இயக்குநர், முகவர் நேற்று மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

தென்மாவட்டத்தில் விருதுநகரை தலைமையிடமாக கொண்டு ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் 10க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை நடத்துகிறது. இந்நிறுவனங்களின் முகவர்கள் மூலமாக 10 முதல் 12 சதவீதம் கூடுதல் வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என, ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரீஸ்வரன், சில மாதத்துக்கு முன்பு ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் முகவர்களான செல்லம்மாள், நாராயணசாமி, மணிவண்ணன் மூலமாக ரூ. 73.50 லட்சம் முதலீடு செய்துள்ளார். இருப்பினும், முதலீடு தொகைக்கான வட்டி விகிதம் முறையாக கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயசங்கரீஸ்வரன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணையில், முறைகேடுக்கான முகாதாரத்தின் அடிப்படையில் அந்நிறுவனங்களின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீதும், ‘நியோ மேக்ஸ்’ உட்பட 11-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களிலுள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகம், இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குப்புசாமி தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர்.

இதன்மூலம் சில ஆவணங்கள், நகைகளும் கைப்பற்றியதாக தெரிகிறது. தலைமறைவான கமலக்கண்ணன் உள்ளிட்ட 6 பேரை தேடிவந்த நிலையில், அவர்களது முன்ஜாமீன் மனுக்களை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், தொடர்ந்து ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்துக்கு எதிராக மதுரையில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் அந்தந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுக்கின்றனர்.

இதற்கிடையில், முதல்கட்டமாக ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான நெல்லையிலுள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநர் தேவகோட்டையைச் சேர்ந்த சைமன் ராஜா (45), மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த முகவர் கபில் ஜோட்சம் (35) ஆகியோரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கமலக்கண்ணன் உள்ளிட்ட 6 பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்