பெங்களூரு இரட்டைக் கொலை: சந்தேக நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த மறைமுகக் குறிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று (ஜூலை 11) மாலை இரட்டைப் படுகொலை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற அலுவலகத்தின் உயரதிகாரிகளான பனீந்திரா ரெட்டி, வினு குமார் ஆகியோர்தான் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேக நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த குறிப்பு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புவதாக அமைந்துள்ளது.

நடந்தது என்ன? - முதல்கட்ட விசாரணையில் கொலை செய்துவிட்டு தப்பியோடியது சபரீஷ் என்ற ஃபெலிக்ஸ் எனத் தெரியவந்தது. ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் சபரீஷ் முன்னர் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் பனீந்திர சுப்ரமண்யா, தலைமைச் செயல் அதிகாரி வினு குமார் ஆகியோருடன் சபரீஷுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளதையும் போலீஸார் கண்டறிந்தனர். முன்விரோதம் காரணமாகவே அவர்களை சபரீஷ் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சபரீஷ் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னர் பனீந்திரா செய்துவந்த அதே தொழிலையே தொடங்கி செய்துவந்துள்ளார். தொழில் போட்டி காரணமாக சபரீஷை பனீந்திரா தொந்தரவு செய்துவந்ததாகத் தெரிகிறது. அதற்கு வஞ்சம் தீர்க்கவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், அந்தக் கொலைக்கு முன்னால் சபரீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அது இப்போது போலீஸ் கவனத்துக்கு வந்துள்ளது. அந்தப் பதிவில் சபரீஷ், "மக்கள் வஞ்சனைகள் செய்கிறார்கள். நான் கெட்ட மனிதர்களை மட்டுமே துன்புறுத்துவேன். நல்லவர்களை எப்போது சிரமப்படுத்துவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் தன்னை ஒரு ஜோக்கர் போல் சித்தரித்துள்ளார். தன்னை ஒரு மாடல், கன்னட மொழிப் பாடல் ரேப்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அவரை 16 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். சபரீஷின் நன்பர்கள் வினய் ரெட்டி, சந்தோஷ் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் கொலை தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரிக்கு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE