செங்கை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர் தப்பியோட்டம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சமூகநலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இல்லத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். இங்கு தமிழகம் முழுவதும் இருந்து, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி வசதி உள்ளிட்டவை அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சிறுவர்களுக்கு உணவு கொடுத்த பின் அவர்களை தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். அப்போது அறையின் பூட்டை உடைத்த சிறுவர்கள் 5 பேர் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சித்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள் குணசேகரன், பாபு ஆகியோர் சிறுவர்களை தடுக்க முயன்றனர்.

இதனால் ஆவேசம் அடைந்த சிறுவர்கள் இருவரையும் செங்கல்லால் தாக்கி, கை கால்களை கட்டி போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீஸார் தப்பியோடிய சிறுவர்களை தேடி வந்த நிலையில் இரண்டு பேரை மட்டும் மீட்டுள்ளனர். மற்ற மூவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்த ஆசிரியர்கள் செங்கை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE