‘தலைமறைவான’ பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் மனு

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழக பாஜக செயலாளர் சூர்யாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. சென்னையை சேர்ந்த இவர் மீது மார்க்சிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்தும் ட்விட்டரில் பொய்யான தகவல் பதிவிட்டதாக மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூர்யாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சூர்யா ஜாமீன் பெற்றார். அப்போது அவர், மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் காலையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

நீதிமன்ற நிபந்தனையின் பேரில் சூர்யா மதுரையில் தங்கியிருந்து 10 நாட்களாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

இதனிடையே, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் ட்விட்டரில் வதந்தி பரப்பியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சூர்யாவுக்கு சிதம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர். பின்னர் சூர்யா தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், சூர்யாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை சூர்யா நிறைவேற்றவில்லை. ஜூலை 2 முதல் அவர் கையெழுத்திடவில்லை. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE