தண்டவாளத்தில் கான்கிரீட் கல்லை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதியா? - ஆர்பிஎஃப், புலனாய்வு பிரிவு விசாரணை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று புலனாய்வு குழு வினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் காவேரி விரைவு ரயில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் அருகே வந்த போது, பாறாங்கல் மீது மோதியது போல பயங்கர சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியபடி எழுந்து கூச்சலிட்டனர். ஓட்டுநர் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்து, பச்சக்குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தினார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தண்டவாளத்தின் மீது மர்ம நபர்கள் கான்கிரீட் கல் ஒன்றை வைத்துள்ளனர். அதன் மீது ரயில் இன்ஜின் மோதியதில், அந்த கல் சிதறி தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே விழுந்துள்ளது என தெரியவந்தது. வீரவர்கோயில் அருகில் உள்ள கடைகள் மற்றும் கோயில் பகுதிகளில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், எந்த துப்பும் கிடைக்கவில்லை. ரயிலை கவிழ்க்கும் சதி திட்டத்துடன் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

சென்னையில் இருந்து மோப்ப நாய் ஜான்சியுடன் வந்த ரயில்வே புலனாய்வு குழுவினரும் தீவிர விசாரணை நடத்தினர். சேலம் உட் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான 10 போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, காவிரி விரைவு ரயில் அரை மணி நேரத்துக்கு பிறகு புறப்பட்டது. இந்த வழித்தடத்தில் திருவனந்தபுரம் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE