மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்பவரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை திரும்ப கொடுக்க சென்றுள்ளார். அப்போது மாணவியை கத்தி முனையில் மிரட்டி தாஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியை தாஸ் மிரட்டியுள்ளார். தனக்கு நடந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தாய் காவல் துறையில் புகார் அளித்தார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நீதிபதி இன்று பிறப்பித்த தீர்ப்பில்,விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தாஸுக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டுமெனக் கூறி, ஆயுள் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, அபராதத் தொகையையும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாணவிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE