திருப்பத்தூர்: 5 ஆண்டுகளுக்கான மருத்துவ படிப்பை முறைப்படி படிக்காமல் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்து விட்டு, குறைந்த கட்டணத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
நகர்புறத்தை காட்டிலும், கிராமப்புறங்களில் போலி மருத்துவர்கள் புற்றீசல் போல பெருகி வருவது மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. போலி மருத்துவர்களின் எண்ணிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் கிளீனிக் நடத்தி மனித உயிர்களோடு விளையாடி வரும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘3 முதல் 5 ஆண்டுகள் மருந்துக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள், தனியார் மருத்துவ மனைகளில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள், மருந்து விற்பனையில் கிடைத்த அனுபவம் என தங்களுக்கு தெரிந்த மருத்துவ அனுபவத்தை கொண்டு கிராமப் புறங்களில் அதை தொழிலாக செய்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சாதாரண காய்ச்சல் தொடங்கி, தலைவலி, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் மற்றும் பல் வலி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு வீரியமிக்க மருந்து, மாத்திரைகளை போலி மருத்துவர்கள் வழங்குவதால், சில நோய்கள் விரைவில் குணமாகின்றன. இதனால், கல்வியறிவு இல்லாத கிராமப்புற மக்கள் போலி மருத்துவர்களை, ‘ராசியான மருத்துவர்’ என நம்புகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில், ஆலங்காயம், ஆம்பூர், உமராபாத், மின்னூர், கந்திலி, ஜோலார்பேட்டை, பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் நடத்தி வரும் கிளீனிக்குகளில் மருத்துவம் படித்ததாக போலி சான்றிதழ்கள் தயார் செய்து அதை பிரேம்போட்டு மாட்டி வைத்துள்ளனர்.
இது தவிர சாதாரண காய்ச்சல் என்றால் ரூ.40, மூட்டு வலிக்கு மருந்து வழங்க ரூ.50, தலைவலிக்கு ரூ.30, சர்க்கரை வியாதி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைக்கு குறைவான கட்டணம் வசூலிப்பதால், பண வசதி இல்லாத ஏழை மக்கள் போலி மருத்துவர்களையே அதிகம் தேடிச் செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படித்த மருத்துவர்கள் நடத்தி வரும் கிளீனிக் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்குகிறது. ஆனால், போலி மருத்துவர்களால் நடத்தி வரும் கிளீனிக்குகள் 24 மணி நேரமும் செயல்படுவதால் அவசர தேவைக்கு போலி மருத்துவர்களிடமே பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளது.
எந்த நோய்க்கு என்ன மருந்து அளிப்பது? நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது கூட தெரியாத போலி மருத்துவர்கள் எல்லா நோய்களுக்கும் ஒரே வகையான மருந்து, மாத்திரைகளை வழங்கி கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர். இதைக்கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதால், மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகமும் இணைந்து போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "முறையாக மருத்துவம் படித்து, இந்திய மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே ஆங்கில முறைப்படி மருத்துவம் பார்க்க தகுதி பெற்றவர்கள். இதுகுறித்து விழிப்புணர்வுகள் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் போலி மருத்துவர்கள் கிராமங்களில் மட்டுமே அதிகமாக உருவாகிறார்கள். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையம், துணை சுகாதார மையங்களில் அனைத்து விதமான வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தெரியாத கிராமப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதால், போலி மருத்துவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் அவ்வப்போது ஆய்வு நடத்தி போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதியில் 2 நாட்கள் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் நடத்தி வந்த கிளீனிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி மருத் துவர்கள் குறித்து பொதுமக்கள் எங்களிடம் புகார் அளித்தால், அதன்பேரில் அங்கு ஆய்வு நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago