மகாராஷ்டிராவில் தலை துண்டிக்கப்பட்ட பெண் - கொலையாளியை கண்டறிய உதவிய ‘டாட்டூ’

By செய்திப்பிரிவு

தானே: கடந்த 2-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள உத்தன் (Uttan) நகரின் கடற்கரையில் பை ஒன்றை சிலர் கண்டெடுத்துள்ளனர். அதில் பெண் ஒருவரின் சடலம் தலை இல்லாமல் இருந்துள்ளது. அது குறித்த தகவல் உள்ளூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரா பயந்தர் காவல் நிலைய போலீஸார் இதை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் சடலம் இரண்டு துண்டுகளாக அந்த பையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரது இடது கையில் ஒரு டாட்டூ இருந்துள்ளது. திரிசூலம், உடுக்கை மற்றும் ஓம் என அதில் எழுதப்பட்டுள்ளது.

அந்த டாட்டூவை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட டாட்டூ வரையும் கலைஞர்களிடம் அது குறித்து கேட்டுள்ளனர். அதில் ஒருவர் அந்த டாட்டூவை பெண் ஒருவருக்கு தீட்டி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. அவரிடம் அந்தப் பெண் குறித்து விசாரித்துள்ளனர்.

அதன் மூலம் உயிரிழந்த பெண் நைகான் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான அஞ்சலி சிங் என தெரிந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவரது கணவர் மிண்டு இல்லை. சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸார் தேடியுள்ளனர். அவரை உள்ளூர் ரயில் நிலையத்தில் அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர்.

காவலாளியாக பணியாற்றி வந்த 31 வயதான மிண்டு, தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின்போது ஆத்திரம் அடைந்த மிண்டு, அஞ்சலியின் தலையை பிடித்து சுவற்றில் பலமாக அடித்துள்ளார். அதில் அஞ்சலி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து தனது அண்ணனின் உதவியுடன் சடலத்தை மிண்டு அப்புறப்படுத்தி உள்ளார். இது போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிந்துள்ளது.

மிண்டு - அஞ்சலி தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர் அஞ்சலியின் பெற்றோர் உடன் நேபாளத்தில் வாசிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது மிண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE