பெண்களை ஆபாச படம் எடுத்த காசிக்கு ஆயுள் முழுக்க சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு, ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (29). இவர் பல பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி ஆபாச வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பின்னர் அவர்களின் வீடியோ மற்றும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்தார்.

இவரால் பாதிக்கப்பட்ட நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலர் அளித்த புகாரில் 2020-ம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் 120 பெண்களின் 400-க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் 1900-க்கும் மேற்பட்ட ஆபாச போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காசி மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றங்களை மறைத்து வழக்கிலிருந்து காசியை தப்பவைக்க முயன்றதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு, நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

சாகும் வரை சிறை: இயற்கை மரணம் அடையும் வரை காசிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். காசியின் தந்தை தங்கபாண்டியன் விடுதலை செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசி மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE