கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலையை கடலூர் போலீஸார் கண்டறிந்தனர் - கலக்கத்தில் கள்ளக்குறிச்சி போலீஸார்

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் பல ஆண்டுகளாக போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்ததை கடலூர் மாவட்டப் போலீஸார் கண்டு பிடித்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டப் போலீஸார் கலக்கமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் கடந்த வாரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, போலி மதுபாட்டில்களை விற்ற நபரை கைது செய்து, விசாரணை நடத்தினர். அந்த போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கடலூர் மது விலக்கு உதவி ஆய்வாளர்கள் நாகராஜ் மற்றும் அறிவழகன் ஆகியோரது தலைமையில் 4 தனிப்படை அமைத்து, விசாரணையை முடுக்கி விட்டார்.

கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார், கல்வராயன்மலையில் தங்கி விசாரணை நடத்தினர். அப்போது, கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததை கண்டுபிடித்த அவர்கள், அந்த இடத்தை சுற்றி வளைத்து, மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்டிருந்த லேபில்கள், காலி பாட்டில்கள், பாட்டில் மூடி, காலி அட்டைப் பெட்டிகள், பாட்டில் தயாரிப்பு உபகரணங்களை கைப்பற்றினர். மேலும் 454 மதுபாட்டில்கள் அட்டைப் பெட்டியில் வைத்து வெளியே விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்திருந்ததையும் கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர்.

4 பேர் சிக்கினர்: மேலும் போலி மதுபான ஆலை தொடர்பாக 4 நபர்களை பிடித்து, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதி தொரடிப்பட்டைச் சேர்ந்த வெங்கடேசன், கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வயலாமூர் குபேந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வீரன், பொறையார் பகுதி ரியாஸ் அகமது என்பது தெரிய வந்தது.

இதனிடையே போலி மதுபான ஆலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு போலீஸார், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களின் பெயர்களை வெளியிடுவதை தவிர்ப்பதோடு, அவர்கள் குறித்த தகவலையும் கடந்த இரு தினங்களாக வெளியிட மறுத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வராயன் மலையில் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வரும் போலீஸார், சாராய ஊறல் தயாரிப்பாளர்கள் குறித்தும், அது தொடர்புடைய நபர்களையும் கைது செய்ததாக இதுவரை அவர்கள் அறிக்கையாக வெளியிடவில்லை. கள்ளச்சாராயம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கல்வராயன்மலை.

அந்த அளவுக்கு கள்ளச்சாராயம் உற்பத்திக்கு கேந்திரமாக விளங்கும் கல்வராயன்மலையில் கடந்த சில ஆண்டுகளாக போலி மதுபான ஆலை இயங்கி வரும் தகவல் அப்பகுதியில் உள்ள காவல் நிலை தனிப்பிரிவு போலீஸாருக்கோ அல்லது மதுவிலக்குப் போலீஸாருக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் கடலுர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புச் சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த போலி மதுபான ஆலை இயங்கிவந்தது கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை கவனத்திற்கு வராமல் இருந்தது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயலை அண்டை மாவட்ட போலீஸார் வந்து கண்டு பிடித்துள்ளதால் கலக்கத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டப் போலீஸார், யாரை குற்றவாளியாக வெளியே காண்பிப்பது என்ற குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் தான் இதுபற்றி ஊடகங்களுக்கு தகவல் அளிக்க பயந்து, அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜை தொடர்பு கொண்டபோது, அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலாதநிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதனிடையே கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலூர் காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ. ராமலிங்கம் என்பவர், சாராயவியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக, அவரை எஸ்பி மோகன் ராஜ் பணியிடை நீக்கம் செய்துள்ளார். அப்பகுதியில் உள்ள காவல் நிலை தனிப்பிரிவு போலீஸாருக்கோ அல்லது மதுவிலக்குப் போலீஸாருக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் கடலுர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE