தஞ்சை | தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 24 பவுன் நகைள் மீட்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் தொடர் கொள்ளைத் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர்.

திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மரத்துறை, நெய்க்குப்பை, மேலக்காட்டூர் ஆகிய பகுதிகளிலுள்ள 3 வீடுகளில் கொள்ளை நடந்தது. இது தொடர்பாக, பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர்சித்திக் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று பந்தநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த, அதே பகுதி சாய்னாபுரத்தைச் சேர்ந்த ஜோதிமணி மகன் ஆசைமணி(24), மற்றும் கருணாநிதி மதன் விக்னேஷ்(24) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

இதேபோல் சோழபுரம் பகுதியில், அண்மையில் மூதாட்டியை ஏமாற்றித் தங்க செயினை திருடிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தனர். அவர் சோழபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ஆசைக்குமார் (42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நாலரை கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீஸார், கைது செய்யப்பட்ட 3 பேரும் வேறு ஏதேனும் கொள்ளை திருட்டு வழக்கில் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE