இணைய வேலை வாய்ப்பு மோசடி - ரூ.10 லட்சத்தை இழந்த வங்கி மேலாளர்

By செய்திப்பிரிவு

நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கொலபாவில் உள்ள வங்கியொன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34-வயதான நபரிடம் வாட்ஸ்அப் மூலம் 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.

அப்போது, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த கும்பல் வங்கி மேலாளரிடமிருந்து ரூ.10லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

வங்கியின் மேலாளர் வீடு சிபிடி பெலாபூரில் உள்ள நிலையில் அவரை 4 பேர் கொண்ட மோசடி கும்பல் வாட்ஸ்அப் வீடியோ மூலம் தொடர்பு கொண்டு பகுதி நேரமாக யுடியூப்பில் வீடியோக்களை லைக் செய்து அதனை டெலகிராம் வலைதளத்துக்கு அனுப்பினால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளது.

2 விளம்பரங்களை லைக் செய்து டெலகிராமில் போஸ்ட் செய்தால் ரூ.180 மற்றும் ரூ.100 வழங்கப்படும் என்று அந்த மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது.

மேலும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.10 லட்சத்தை ஏழு வங்கி கணக்குகளுக்கு அனுப்ப வேண்டும் என வங்கி மேலாளரிடம் அந்த மோசடி கும்பல் தெரிவித்துள்ளது.

இதனை நம்பி அவர் பணத்தையும் அனுப்பியுள்ளார். ஆனால், இந்த முதலீட்டின் மூலம் லாபம் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதுகுறித்து அந்த மோசடி கும்பலிடம் கேட்டதற்கு, முதலீட்டிற்கான நடைமுறை இன்னும் முடியவில்லை. இன்னும் கொஞ்சம் பணத்தை அனுப்பினால் லாபத்துடன் மொத்த முதலீட்டு பணத்தையும் கொடுத்து விடுவதாக மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.

அதன் பிறகே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட வங்கி மேலாளர் கொலபாவில் உள்ள வங்கி கிளையை நாடி பணத்தை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால், இது குறித்து போலீஸில் புகார் அளிக்குமாறு வங்கி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு வங்கி மேலாளர் ஒருவரே மோசடி வலையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE