விழுப்புரம் | சிறுமியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் சிறை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(15). அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். 2020 மே 9-ம் தேதி ஜெயஸ்ரீ வீட்டில் தனியே இருந்தபோது, திடீரென வீட்டுக்குள் இருந்து புகை வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ கதறிக் கொண்டிருந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (எ) முருகையன் (51), யாசகம் (எ) கலியபெருமாள் (60) ஆகியோர், முன்விரோதம் காரணமாக தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த நாள் ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலர் யாசகம் என்ற கலியபெருமாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட முருகையன், கலியபெருமாள் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.85 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE