தருமபுரி | பத்தாம் வகுப்பு படித்துவிட்டு 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு முடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸார் நேற்று (9-ம் தேதி) கைது செய்தனர்.

பாலக்கோடு பகுதியில் சிலர் மருத்துவக் கல்வித் தகுதி இல்லாமல் கிளினிக் நடத்துவதாக தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, இணை இயக்குநர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

பாலக்கோடு பகுதி மருந்து ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியம், சந்திராமேரி, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பாலக்கோடு அருகிலுள்ள எலங்காளப்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அதில், அருகிலுள்ள கெட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(48) என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்ததும், அந்த மெடிக்கல் ஸ்டோரில் கடந்த 10 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரது மெடிக்கல் ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பாலக்கோடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து போலீஸார் முருகேசனை கைது செய்து, மருத்துவ சிகிச்சை அளிக்க அவர் பயன்படுத்தி வந்த உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE