தமிழகத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா பாதிப்பு; 1,086 பேர் சிகிச்சை - ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று பெண்கள் 106, ஆண்கள் 92 என மொத்தம் 198 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 63 பேருக்கும், செங்கல்பட்டில் 25 பேருக்கும், கோவையில் 16 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து வந்த 2 பேருக்கும், புதுச்சேரியில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 97,502 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 58,366 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 105 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,086 பேர் சிகிச்சையில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு: தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபன் (54) என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறும் இடது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பும் இருந்து வந்தது. அதற்கும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் நேற்று காலை 8.40 மணியளவில் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதியவர் உயிரிழப்பு: அதேபோல், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த சுப்பிரமணி (82) என்ற முதியவர் கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றபோது சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.

அவரது மனைவி பழனியாத்தாள் (78) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE