நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு தொற்று பாதிப்பு | ஷாருக் கான் உட்பட 55 நடிகர்களுக்கு கரோனா

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தி நடிகர் ஷாருக் கான், நடிகை கேத்ரினா கைஃப் உட்பட 55 நடிகர், நடிகைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24,052 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சில மாதங்களாக கரோனா தொற்று குறைவாக பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு4 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதையடுத்து, கரோனா தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரபல இந்திநடிகர்கள் ஷாருக்கான், கார்த்திக் ஆர்யன், ஆதித்யா ராய் கபூர், நடிகை கேத்ரினா கைஃப் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேத்ரினா கைஃப்புக்கு சிலநாட்களுக்கு முன்பே கரோனாபாதிப்பு ஏற்பட்டது என்றும், இப்போது அவர் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பில் கேத்ரினா கடந்த வாரம் இணைந்திருக்க வேண்டும். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர்.

பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனது50-வது பிறந்த தினத்தை மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் கடந்த மே 25-ம் தேதி கொண்டாடினார். அப்போது நடந்த பிரம்மாண்ட விருந்தில் ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், சைஃப் அலி கான், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சினிமா மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த 120 பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 55 நடிகர், நடிகைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் யாரும் வெளியே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்திக் ஆர்யன்இந்த விழாவுக்கு செல்லவில்லை என்றாலும் இதில் கலந்துகொண்ட நடிகை ஒருவர்மூலம் அவருக்கு தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து,சினிமா ஸ்டூடியோக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மும்பை மாநகராட்சி விதித்துள்ளது. ஸ்டூடியோக்களில் ஆடம்பரமான விருந்துநிகழ்ச்சிகளையோ, விழாக்களையோ நடத்தக் கூடாது என்றும்,அப்படி நடத்தினால் அதுபற்றிமுன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தினசரி பாதிப்பு 1% தாண்டியது

இதனிடையே,தினசரி கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு சதவீதம் 34 நாட்களுக்கு பிறகு 1 சதவீதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர். இதுவரை கரோனாவால் மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 692 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24,052ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாளைவிட 1,636 அதிகம் ஆகும். இந்தியா முழுவதும் இதுவரை 194.09 கோடிடோஸ்களுக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE