உலக நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கரோனா நோய்த்தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது கரோனா தொற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா இறப்புகளைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசியே அடிப்படை என்பதனைக் கருதி, மாவட்ட வாரியாக தடுப்பு ஊசி போட தகுதியானவர்களில், தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.

உலக நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வர், தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

> நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

> தமிழகத்தில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பு ஊசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் 2-ஆம் தவணை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய ‘மெகா’ தடுப்பு ஊசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

> குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவனை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை (Precautionary Dose) செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி ‘மெகா’ தடுப்பு ஊசி முகாம்கள் மூலம் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

> மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பு ஊசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவுரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.

> பொது சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின்படி, மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

> பொது சுகாதார வல்லுநர்கள் கூறிய வழிமுறைகளான கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில் குமார், பொதுத் துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE