சமூக வலைதளங்களில் தமிழக மக்கள் விளையாட்டாக 'நியூ இயர்- லாக் டவுன்- ரிப்பீட்டு' என்று 'மாநாடு' திரைப்பட பாணியில் மீம்ஸ் பதிவிட்டாலும் கூட, நிதர்சனம் அதன் பின்னணியில் இருக்கும் மக்களின் வலியைக் காட்டாமல் இல்லை. புத்தாண்டு என்பது புது லட்சியம், புது எதிர்பார்ப்பு என ஆரம்பிக்க வேண்டிய சூழலில் 2020, 2021 ஐ போலவே இந்த ஆண்டும் கரோனா அலை, மருத்துவர்கள் எச்சரிக்கை, ஊரடங்கு வாய்ப்பு என விரிந்து கொண்டிருக்கிறது முதல் மாதம். ஆனால், கடந்த இரண்டு அலைகளைப் போல் அல்லாமல் இந்திய மாநிலங்கள் முழு ஊரடங்குக்கு சற்று தயக்கம் காட்டி வருகின்றன.
கேரள, மகாராஷ்டிரா வியூகம் என்ன? - இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 723 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது. கடந்த 227 நாட்களுக்குப் பின் ஒரே நாளில் 1.79 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறை.
இதற்கிடையில், முந்தைய அலைகளில் அமல்படுத்தப்பட்டது போல் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது என்பது மக்களின் வாழ்க்கையின் மீதும், வாழ்வாதாரம் மீதும் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் எனக் கூறிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், 'அப்படி ஏதும் நடந்துவிடாமல் காப்பது அவசியம்' என்றார். அதேவேளையில் 'கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துதலும், வீட்டுத் தனிமையை தீவிரப்படுத்தியும் நெறிமுறைகள் வெளியிடப்படும்' என்றார்.
கேரளாவின் நிலைப்பாடு இப்படியிருக்க, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மிகத் தெளிவாக தனது நிலைப்பாட்டை ஒரு ரோல் மாடல் போல் அறிவித்திருக்கிறார். "நாம் இரண்டு ஆண்டுகளாகவே கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் இரண்டு அலைகளை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளோம். இப்போது வைரஸ் வேறு அவதாரத்தில் வேகமாகப் பரவும் தன்மையுடன் வந்துள்ளது. இத்தருணத்தில் இது மிதமானது, கடினமானதா என்றெல்லாம் விவாதிப்பதைத் தவிர்த்து, இதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மருத்துவக் கட்டமைப்புக்கு சமாளிக்க முடியாத அச்சுறுத்தல் உருவாகும்.
இங்கே நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். நாங்கள் தேவையற்ற கூட்டங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறோமே தவிர, லாக்டவுனை விரும்பவில்லை. மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தாமாக உணர்ந்து பின்பற்றாவிட்டால் எவ்வித ஊரடங்கும், கட்டுப்பாடும் உபயோகமற்றதாகவே போகும். அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். லேசான அறிகுறி இருந்தாலுமே உடனே மருத்துவ ஆலோசனையைப் பெற்று தற்காத்துக் கொள்ளுங்கள். கட்டுப்பாடுகளை மீறுவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
இந்தச் சூழலில் தமிழக முதல்வரும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறார். முதல் அலையின்போது கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டபோது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இப்போதுதான் மெல்ல மெல்ல அமைப்புசாரா தொழில்கள் கரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரும் சூழலில் இன்னொரு முழு ஊரடங்கு இரட்டைச் சுமையாக மட்டுமே அமையும். இதனாலேயே இரண்டாவது அலையின்போது மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்துவதை மாநில அரசுகளின் முடிவுக்கு எனத் தள்ளிவிட்டு நின்றது. இரண்டாவது அலையில் மோசமாக பாதிக்கப்பட்ட டெல்லி மிக சாமர்த்தியமாக ஊரடங்கைப் பயன்படுத்தி வெற்றிகரமாக தொற்றைக் கட்டுப்படுத்தியது.
இப்போதும் கூட ஊரடங்கு விவகாரத்தை மாநில அரசுகளின் முடிவுக்கே அரசு விட்டுவைக்கும் என்று டெல்லி வட்டாரம் கூறுகின்றது. இந்நிலையில், அரசாங்கமே எல்லாம் செய்ய வேண்டும் என்றில்லாமல் மக்களும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
என்ன நினைக்கிறார்கள்? - மதுரையைச் சேர்ந்த பிஎன்ஐ எனப்படும் வர்த்தகக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான அஹமது யூசூஃப் கூறியது:
''கரோனா இனி எப்போது உலகை விட்டுச் செல்லும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கரோனா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும், வந்தால் எப்படி சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்குமே அனுபவம் வந்துவிட்டது. கடந்த இரண்டு அலைகளில் வீட்டில் யாருக்கேனும் ஒருவருக்காவது தொற்று ஏற்படாத குடும்பம் மிக மிக சொற்பம். ஆகையால் இந்தச் சூழலில் மீண்டும் முழு ஊரடங்கு என்பது அபத்தமாகவே அமையும். கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தல், கரோனா தடுப்பு நடவடிக்கையை மீறுவோருக்கு அபராதம் விதித்தல், எங்கெல்லாம் வீட்டிலிருந்து பணிபுரிதல் சாத்தியமோ அதை அமல்படுத்துதல் போன்றவற்றையே அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்து விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு மீள்வதற்கான ஒரே வழியான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். நான் ஒரு சிவில் இன்ஜினீயர். இந்தச் சூழலில் மீண்டும் லாக்டவுன் என்பது கொள்முதல் தொடங்கி இறுதிக் கட்டுமானம் வரை அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்றே நாங்கள் கோருவோம்'' என்றார்.
தொழில் முனைவோர் மட்டுமல்ல, அமைப்புசாரா தொழிலாளர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே முழு ஊரடங்குக்கு எதிராகவே கருத்து கூறுகின்றனர். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் சம்பளக் குறைப்பால் 10 ஆண்டுக்கு முந்தைய சம்பளத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு முழு ஊரடங்கு இன்னும் எதைப் பறிக்கும் என்ற கிலிதான் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்: கரோனா முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அத்தனையிலும் அதிகமாகப் பாதிக்கப்படும் மகாராஷ்டிராவும், கேரளாவும் முழு ஊரடங்கை விரும்பவில்லை என்று கூறும் நிலையில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் அனைவரும் குடிமக்களுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிந்து அதில் நெகட்டிவ் வந்தபின் வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். 8-வது நாளில் அந்த நபர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, அந்த முடிவை, மத்திய அரசின் ஏர்-சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனை முடிவு நெகட்டிவ் அதாவது கரோனா இல்லை எனத் தெரியவந்தால், அடுத்த 7 நாட்களுக்கு தனது உடல்நிலையை அவர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும் போது, ஏதாவது அறிகுறி உருவானாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த முடிவு வரும்வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது. இதனைப் பின்பற்ற அனைத்து மாநிலங்களுமே தயாராகிவிட்டது.
தமிழகத்துக்கு சபாஷ்: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியின் பரிந்துரை: கரோனா தொற்றை எப்படி தடுக்க வேண்டும் என்பதில் "தமிழக அரசு நல்ல அனுபவம் பெற்றிருக்கிறது. நாம் தடுப்பூசி போடுவதில் நல்ல நிலையில் இருக்கிறோம். அதனால், தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவையில்லை" என்று உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தடுப்பூசி எனும் பேராயுதம்: தடுப்பூசி செலுத்தாதோரையே ஒமைக்ரான் தீவிர பாதிப்புக்குள்ளாக்குவதால் தற்போது நாடு முழுவதும், 15 வயது முதலே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 1,51,57,60,645 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுவிட்டன.
பிப்ரவரியில் கரோனா 3-வது அலை இந்தியாவில் உச்சம் தொடும் என்ற கணிப்புகள் ஒருபுறமிருக்க, கரோனா தொற்றின் தாக்கம் இன்னும் 3 மாதங்களில் குறையத் தொடங்கும் என்று மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்குழுவின் தலைவரும் மருத்துவ நிபுணருமான என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள இதற்கு முன்னர் உலகம் சந்தித்த தொற்றுக் காலங்களில் இருந்ததைவிட அதி நவீன மருத்துவக் கட்டமைப்பு, 8 மாதத்திலேயே கண்டுபிடிக்க தடுப்பூசி, தற்காப்பு அம்சங்கள் என நமக்கு பல்வேறு உத்திகளும், வழிகளும் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி மீள்வதும், டைம் லூப் போல் மீண்டும் மீண்டும் சிக்கி உழன்று கொண்டிருப்பதும் மக்களின் கைகளிலும் இருக்கிறது. முதல் அலையில் முதல் வாசகமாக சொல்லப்பட்ட பிரேக் தி செயினைப் பின்பற்றுவோமாக.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago