பூஜை அறைகளில் கோதுமை விளக்கு: கரோனாவைத் துரத்த நூதன வழிபாடு

By குள.சண்முகசுந்தரம்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவைக் கட்டுப்படுத்தப் பல நாடுகளும் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், செட்டிநாட்டுப் பெண்கள் வீடுகளில் பூஜை அறையில் கோதுமை விளக்கேற்றி நூதன வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி விசாரித்தபோது மேலும் பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. கோதுமை மாவில் அகல் விளக்கு செய்து அதற்கு மஞ்சள், குங்குமப் பொட்டிட்டு பூஜை அறையில் வைத்து, நெய் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படிச் செய்தால் கரோனா உள்ளிட்ட எந்த நோயும் வீட்டுக்குள் அண்டாது.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குள் இப்படி விளக்கேற்றி வழிபாடு நடத்த வேண்டும். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் விளக்குகள் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

இதே விளக்கை மாலையில் ஒரு தரம் ஏற்றி நிறைவு செய்துவிட்டு விளக்கை உதிர்த்து காக்கை, குருவிகளுக்குப் போட வேண்டுமாம்.

இந்தியாவுக்குள் இருந்து மட்டுமல்ல... சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கும் செட்டிநாட்டு ஆச்சிமார்கள் இந்தத் தகவலை தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு எல்லாம் பரப்பியதை அடுத்து செட்டிநாட்டுப் பகுதியில் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க பலரது இல்லங்களில் கரோனாவை விரட்ட இன்று காலையில் இருந்து கோதுமை விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இது தொடர்பான படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE