கரோனா வைரஸ் பரவப்பரவ சுயபிரஸ்தாப மருந்து, மருத்துவப் பரிந்துரைகள் பெருகி மருந்துக்கடைகளில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுய்ன் மருந்துகளை கவுண்ட்டரில் கேட்டு வாங்கும் பழக்கம் இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து வருகிறது.
காரணம் அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் கேள்வியறிவில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஒரு கேம் சேஞ்சர் என்று அறிவிக்க கடைகளில் கூட்டம் மோதத் தொடங்கியது. இதோடு சேர்த்து தொண்டை பாக்டீரியா கிருமித் தொற்றுக்கு கொடுக்கப்படும் அசித்ரோமைசின் என்ற மாத்திரையையும் ட்ரம்ப் அறிவியல் ஆதாரமில்லாது, ‘எனக்கும் தெரியும்’ என்று முந்திரிக்கொட்டை அறிவிப்பு செய்து பெரிய தவறிழைத்தார்.
இதனையடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் அசித்ரோமைசினை சேர்ந்து எடுத்துக் கொண்ட சிலர் இறந்தனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துயரங்கள் இந்த சேர்க்கை மருந்துகளின் பாதுகாப்புத் தன்மைகள் குறித்த கேள்விகளை எழுப்பியது. அதாவது கோவிட்-19க்கு இது உகந்ததா என்ற கேள்விகள் ஆய்வாளர்கள், மருத்துவ நிபுணர்களிடம் ஏற்பட்டது.
» கரோனா வைரஸ் | ஏன் 21 நாட்கள் லாக் டவுன்?- மக்கள் பின்பற்றியே ஆக வேண்டும்: நிபுணர்கள் விளக்கம்
அசித்ரோமைசின் பாக்டீரியா தொற்று நிமோனியாவுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதாகும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது குளோரோகுய்ன் என்பதன் ஒரு மாற்று வகையாகும். குளோரோகுய்ன் போர்க்காலங்களில் மலேரியா காய்ச்சல் ஊடுருவிய போது 1940களில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு குளோரோகுய்னுக்கும் சில கிருமித் தொற்றுக்கள் ‘பெப்பே’ காட்டி தடுக்க ஆரம்பித்தன. இதனைப் பயன்படுத்த முடியாது போகவே ஹைக்ட்ராக்சிகுளோரோகுய்ன் என்பதை மருத்துவ ஆய்வில் கண்டுபிடித்தனர். இன்று இதுதான் மலேரியா காய்ச்சலுக்கு எதிராகப் பயன்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் இது தன்னைத்தானே காத்துக்கொள்ளும் (auto-immune) நோய்களான முடக்கு வாதம் (rheumatoid arthritis,மற்றும் லூபஸ் (lupus)என்ற ‘ஆயிரம் முகங்கள் கொண்ட’ தீவிர தற்காப்பு ஆற்றல் அழிப்பு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகும்.
இந்நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுய்ன் பற்றிய இந்த புது உத்வேகம் கரோனா வைரஸ் தொடர்பாக ஏற்படக் காரணம் நாவல் கரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளைக் கொண்டு சிறிய அளவில் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வே. கோவிட்-19-க்குக் காரணமாகும் SARS-CoV-2 என்பதன் தாக்கமும் அளவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சிகிச்சையினால் குறைந்தது தெரியவந்தது. ஆனால் ஒன்றை கவனிக்கத் தவறினர் கோவிட்-19-ன் கிளினிக்கல் அறிகுறிகளில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே. சீனாவில் 100 நோயாளிகளைக் கொண்டு நடத்திய ஆய்விலும் ஓரளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உதவியதாகக் கூறப்பட்டது.
இந்த இரண்டு பூர்த்தி பெறாத, கறார் ஆய்வுக்குட்ப்படுத்தப்படாத ஆய்வுகளின் அடிப்படையில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பிரபலமானது. அசித்ரோமைசினும் பிரபலமானது. இந்த இரண்டு ஆய்வுகளும் முறையான மருத்துவ ஆய்வு தரநிலைகளுக்குள் வரும் கிளினிக்கல் ஆய்வுமுறைகளைப் பின்பற்றாததாகும். அதாவது நோயாளிகளின் முந்தைய நோய் வரலாறு எதுவும் இல்லாமல் எதேச்சையாகத் தேர்வு செய்து எதேச்சையான முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும் இந்த ஆய்வுகள்.
அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் கழகத்தின் இயக்குநரும் அமெரிக்க கரோனா தொற்று பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ஆண்டனி ஃபாக்கி இது தொடர்பாகக் கூறிய போது, “இந்த இரண்டு மருந்துகளில் கரோனா தடுப்பு என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட கிளினிக்கல் சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட கறார் ஆய்வுகள் மட்டுமே இந்த மருந்துகள் இந்த வைரஸுக்கு எடுபடுமா, பாதுகாப்பானதா என்பதை தெரிவிக்கும். மேலும் எப்போது பயன்படுத்த வேண்டும், டோஸ் என்ன என்பதெல்லாம் கறாரான ஆய்வில்தான் தெரியவரும்” என்றார்.
டாக்டர் டேவிட் சல்லிவான் என்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக நுண் உயிரியல் பேராசிரியர் கூறும்போது, “அப்படி ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கரோனாவைத் தடுக்கும் தணிக்கும் என்றால் எங்களுக்கு எப்போதோ தகவல் வந்து சேர்ந்திருக்கும். இப்போதைக்கு இந்த மருந்து வேலை செய்யும் என்பதற்கான கிளினிக்கல் ஆதாரங்கள் இதுவரை இல்லை” என்றார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் முந்திரிக்கொட்டை தனமாக இப்படி அறிவிக்க அமெரிக்க மெடிக்கல் ஸ்டோர்களில் கூட்டம் குவியத் தொடங்கியது, இதனையடுத்து மருந்துக் கடைக்க்காரர்களே சமூக ஊடகங்களில் இந்த மருந்து முடக்குவாத நோயாளிகளுக்கானது, லூபஸ் நோய்க்கானது அவர்களுக்கு இல்லாமல் தீர்ந்து போகும் என்று எச்சரித்தனர். மேலும் மருத்துவர்களையும் ‘முறையற்ற விதத்தில்’இதனை பரிந்துரை செய்வதும் கூடாது என்றும் முறையிட்டனர்.
ஆனால் அந்தந்த நோயாளிகளின் உடற்கூறு நலன்களைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாகாமல் இருக்க ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கொடுக்கிறோம், என்று டாக்டர் டேனியல் குரிட்ஸ்கேஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இது தீர்வாகாது, ஆனால் கண் முன்னால் நோயாளிகள் உடல் நலம், மூச்சுக்குழல் பிரச்சினை சிக்கலாகும் போது ஹைட்ராக்சி குளோரோகுய்ன் கொடுத்து கொஞ்சம் தணிக்கலாமா என்று பார்க்கப்படுகிறது, மரணத்தைத் தடுக்க ஏதாவது வழி இருக்குமா என்ற வகை முயற்சிதான் இதுவுமே தவிர கோவிட்-19க்கு எதிரான ஆய்வு பூர்வ சிகிச்சையல்ல என்று கரோனா மருத்துவர்களும் தெரிவித்தனர்.
கோவிட்-19க்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எப்படி வேலை செய்கிறது?
விஞ்ஞான தரவுகள் போதிய அளவு இல்லாவிட்டாலும் மருத்துவர்கள் குருட்டுத்தனமாக ஹைட்ராக்சி குளோரோகுய்னை பயன்படுத்துவதில்லை. கரோனா பாதித்த நோயாளிகளின் மூச்சுக்குழாய் பாதையில் உள்ள செல்கள் கரோனாவைரஸ்களை சிறுபொதி போன்ற அமைப்பில் வைத்திருக்கும். வைரஸ் இந்த சிறுபொதியை உடைத்து செல்லின் மரபணு பொருளை வெளியே கொண்டு வர முயற்சி செய்யும் அப்போது வைரஸை இரட்டிப்பாக்கும் நகல் எந்திரமாக செல் மாறிவிடும். மேலும் பல வைரஸ்களை உற்பத்தி செய்து விடும். இந்த வேலையைச் செய்ய SARS-CoV-2-வுக்கு ஒரு அமிலத்தனமான சூழல் தேவைப்படும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஒரு காரமான காம்பவுண்ட் ஆகும். இது உடனேயே pH என்று அழைக்கப்படும் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மட்டத்தை வைரஸைத் தாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அதிகரிக்கும், இதன் மூலம் வைரஸ் தன் மரபணுப் பொருளை வெளிப்படுத்தி தன்னைத்தானே இரட்டிப்பாக்கிக் கொள்ளும் நடவடிக்கை ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் தடுக்கப்படும்.
இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் விளைவு என்னவெனில், செல்களிலிருந்து கரோனா வைரஸ் வெளியேற்றப்படும். அதால் தொற்றாக முடியாது.
ஆனால் இதே போன்ற நடைமுறை அசித்ரோமைசினுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனாலும் மோசமான சுவாசப்பாதை நோய்க்குறிகளுக்கு அசித்ரோமைசின் உதவும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். அதாவது நுரையீரலைப் பாதிக்கும் வைரஸ்களினால் ஏற்படும் அழற்சிக்கு இது ஒத்து வரும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
பரிசோதனைச்சாலைகளிலும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மேற்கண்ட வகையில் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது, ஆனால் ‘பரிசோதனைச்சாலைகளில் வெற்றி பெறும் ஒன்று உண்மையான நோயாளிகளிடத்தில் பலனளிக்காமல் கூட போய்விடுவதுண்டு’ என்று நுண் உயிரியல் மருத்துவ நிபுணர் ஓட்டோ யாங் கூறுகிறார்.
இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், ஹைட்ராக்சிகுளோரோகுயின், அசித்ரோமைசின்கள் கோவிட்-19க்கு தீர்வாகுமா என்பது இன்னமும் ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்படாத நேரத்தில் மக்கள் இதனை தாங்களாகவே எடுத்துக் கொள்வது ஆபத்தில் தான் போய் முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago