கரோனா: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அறிவிப்பு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை புறக்கணித்தன.

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மார்ச் 23) திமுக கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை வலியுறுத்தினார். அலுவல் ஆய்வுக்கூட்டத்திலும் வலியுறுத்தினார். இந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்தியாவில் 75 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 8,950 பேர்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், அதற்கும் மேலாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம். பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு அச்சத்தில் இருக்கின்றனர்.

சக்கரபாணி: கோப்புப்படம்

சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு அரசு உடன்படாத காரணத்தால் சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம். கரோனா வைரஸின் தாக்கத்தை உணர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். தொகுதி மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என, அவர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்" என தெரிவித்தார்.

திமுக மட்டுமல்லாமல், காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE