ரஷ்யாவையும் விட்டுவைக்கவில்லை: 199 பேருக்கு கரோனா பாதிப்பு

கரோனா வைரஸ் உலகின் 150 நாடுகளுக்கும் மேல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் 199 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் பெரும்பாலான நாடுகளைத் தாக்கி வரும் கரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மெல்ல மெல்லப் பரவி கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவை விட இத்தாலியில் இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை அதிகம். ஆசிய நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகளில் அதிகமான மக்களை இந்நோய் தாக்கியுள்ளது.

ரஷ்யாவிலும் இப்போது கரோனா பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கோவிட் -19 வைரஸ் நோய்த் தொற்று ரஷ்யாவில் இதுவரை 199 பேரைப் பாதித்துள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக மாஸ்கோ சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். ஆனால், இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 79 வயதான மூதாட்டி நிமோனியா, ரத்த உறைவு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பொது இடங்களில் 50க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு மாஸ்கோ நகர அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள் முதல் மூன்று வாரங்களுக்கு மூடப்படும். மாஸ்கோவில் முகக் கவசங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேவைகளைப் பூர்த்தி செய்வது எளிதான காரியமல்ல.

எனினும் முன்னதாகவே நிறைய மாஸ்கோவாசிகள் முகக் கவசங்களை மொத்தமாக சேமித்து வைத்துக்கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாஸ்கோ நகர போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் டைகாலோ கூறியதாவது:

''புதிய விதிமுறைகளின் கீழ், ஓட்டுநர்கள் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை முகக் கவசங்களை மாற்றி, சானிடைசர் தயாரிப்புகளைப் பயன்படுத்தி தங்கள் கைகளைச் சுத்தம் செய்வேண்டும். தங்கள் வாகனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். சீட் பெல்ட் கட்டுகள், கதவு கைப்பிடிகள், ஸ்டியரிங் ஆகியவற்றையும் அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும். கார்களில் தவறாமல் காற்று நிரப்பப்பட்டுள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

ஓட்டுநர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்வதற்கும், அவர்களது வாகனங்கள் (சானிடைசர்) கிருமி நீக்கம் செய்வது குறித்தும் மாஸ்கோ காவல்துறை பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. பொதுப் போக்குவரத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, இந்த சோதனையில் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குச் சேவை செய்யும் ஓட்டுநர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது’’.

இவ்வாறு மாஸ்கோ நகர போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE