கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் "ஜனதா ஊரடங்கு" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச சமூகம் அனைத்தையும் அச்சுறுத்தும் ஒரே வார்த்தையாகக் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் மாறியுள்ளது. இதனால் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என அறிவுறுத்தியுள்ளன. இதன்படி ஐடி உட்பட வெவ்வேறு தனியார் துறை ஊழியர்கள் பலர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
''உலகம் முழுவதும் கோவிட்-19 நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள நமக்கு கரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இது சாதாரண சூழல் இல்லை. கரோனா வைரஸ் பரவுவது குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இப்போது வரை கரோனை வைரஸைத் தடுக்க அறிவியலில் எந்தத் தடுப்பு மருந்தும் முறையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்ற சூழலில் இயற்கை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
உலகப் பெருந்தொற்று நோயான கரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தீர்மானமும், எதிர்த்துப் போராடும் தீரமும் இருப்பது அவசியம். மாநில அரசுகளும், மத்திய அரசும் அறிவுறுத்தும் வழிகளை மக்கள் செவி கொடுத்துக் கேட்டு அதன்படி வழிநடப்பது அவசியமானதாகும்.
இந்தத் தடுப்பு நடவடிக்கை என்பது நம்மை ஆரோக்கியமாக வைக்கவும், பாதுகாக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கையாகும். அடுத்து வரும் வாரங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசியம் ஏற்பட்டால் மட்டும் செல்லுங்கள். இல்லாவிட்டால் செல்ல வேண்டாம். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருங்கள்.
22-ம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
நாள்தோறும் ஒருவர் குறைந்தபட்சம் 10 பேருக்காவது கரோனா வைரஸ் குறித்தும் ஜனதா ஊரடங்கு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் அனைவரும் சில வாரங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக மருத்துவமனை, விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான மக்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். வரும் 22-ம் தேதி நாம் அனைவரும் 5 மணிக்கு நாம் அனைவரும் வீட்டின் முற்றத்தில், பால்கனியில் நின்று கொண்டு கை தட்டி, 5 நிமிடம் மணியோசை எழுப்பி மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மரியாதை செலுத்துவோம்.
மக்கள் யாரும் பதற்றமடைந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உறுதி செய்வோம்.
மருத்துவமனைக்கு வழக்கமாக உடல் பரிசோதனைக்குச் செல்லும் மக்கள் அதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால் அதை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மனதில் வைத்து மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்.
கரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படாமல் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். முதலாம் உலகப் போர், 2-ம் உலகப்போரில் நாடுகள் பாதிப்பு அடைந்ததை விட இந்த கரோனா வைரஸால் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார பாதிப்பைச் சரிசெய்ய பொருளாதார அதிரடி மீட்பு நடவடிக்கை குழு நிதியமைச்சர் தலைமையில் அமைக்கப்படும். இந்தக் குழு அனைத்து நிறுவனங்களுடன், நிறுவனத் தலைவர்களுடன் பேசி அவர்களின் கருத்துகளைப் பெற்று முடிவெடுப்போம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago