கரோனாவால் முடங்கிய பொருளாதாரம்: தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், கடன் செலுத்த அவகாசம்; சட்டபேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

கரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தை சீர்செய்ய சிறு தொழில்கள், நிறுவனங்களுக்கு சலுகைகள், வரி, கடன் செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என,தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) காலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசியதாவது:

"கரோனா வைரஸ் தாக்கத்தால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது. இதை ஒரு 'பொருளாதார எமர்ஜென்சி'யாக பிரிட்டன் அறிவித்து 'பிசினஸ் பேக்கேஜ்' என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, அங்கிருக்கும் சிறு தொழில்களுக்கு ரொக்க மானியம் வழங்குவதாக, குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல, தொழில்களுக்கு மானியம் அளிக்கப்படும் என்றும், வரி, வாடகை, குடிநீர், மின் மற்றும் சமையல் எரிவாயு கட்டணங்கள் வசூல் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பையும் பிரிட்டன் அறிவித்துள்ளது.

சம்பளம் வழங்குதல், வரிச்சலுகை போன்ற 'மீட்பு பேக்கேஜ்'களை நியூசிலாந்து அறிவித்திருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகளை அதிகரிப்பது, சிறு தொழில்கள் கம்பெனிகளுக்கு ஆதரவு அளிக்கும் சலுகைகள், வரி, கடன் செலுத்துவதற்கு கால அவகாசம், போன்றவற்றை இத்தாலி நாடு அறிவித்திருக்கிறது. தொழில்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பாதுகாக்க வரம்பில்லாத கடன் வழங்கும் முறையை ஜெர்மனி அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் ஒடிசா மாநிலம் கரோனா பரவுவதைத் தடுக்க ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது. வெளிநாடு சென்று வந்தவர்கள் தாங்களாகவே அரசிடம் பதிவு செய்துகொண்டு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டால் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஆகவே, மேற்கண்ட இந்த மாதிரிகளை நம்முடைய தமிழக அரசும் கடைப்பிடித்து கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார, பொது சுகாதாரப் பாதிப்புகளை தடுக்க வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும் எடுக்க வேண்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE