வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்: தமாகா இளைஞரணித் தலைவர் வலியுறுத்தல்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என, தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா இன்று (மார்ச் 18) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸின் தாக்கத்தால் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

கரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய வர்த்தகர்கள் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் நாட்டு வர்த்தகர்கள் தமிழக ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கொடுத்த ஆர்டர்களை இரண்டு மாதம் வரை தமாதமாக அனுப்பி வைக்கக் கோருகின்றனர். ஏற்கெனவே தயாரித்து அனுப்பி வைத்த ஆர்டர்களுக்கான தொகையும் தாமதமாகவே கிடைக்கும் நிலை உள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வர்த்தகம் பாதித்து, கடன்களை உரிய காலத்திற்குள் செலுத்துவது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களால் இயலாததாகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் கடன் செலுத்துவதில் நிறுவனங்களுக்குக் கால அவகாசம் வழங்கியுள்ளன. அதேபோல், நிறுவனங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு இந்திய அரசும் அவகாசம் வழங்க வேண்டும். மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன் தவணைகளுக்கு விலக்கு அளிக்கவும், ஜிஎஸ்டி வட்டி விகிதங்களைக் குறைக்கவும், தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என யுவராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE