கரோனா அச்சுறுத்தல்: மக்கள் வலியுறுத்தலால் புதுச்சேரியில் நாளை முதல் மதுபான பார்கள் மூடல்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் நாளை முதல் மதுபான பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மதுபான பார்களை மூடுவது தொடர்பாக 2 நாட்களில் முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர்களின் அறிவுறுத்தலின்படி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் மதுபான பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஏராளமான மதுபான பார்கள், மதுபான விற்பனையுடன் கூடிய உணவகங்கள், சாராயக் கடைகளில் ஏராளமானோர் கூடுகின்றனர். இச்சூழலில் கரோனா வைரஸ் அச்சம் மக்களிடம் எழுந்துள்ள சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதுச்சேரி அரசு மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்காமல் விலக்கு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதே நேரத்தில் மாஹே பிராந்தியத்தில் மட்டும் நேற்று முதல் மதுக்கடைகளை கலால் துறை மூடியது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பார்களில் குவிந்தனர். இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இச்சூழலில் முதல்வர் நாராயணசாமி இன்று (மார்ச் 18) செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொதுமக்கள் உணர்வுக்கு மதிப்பு தந்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள அனைத்து மது அருந்தும் பார்கள் மற்றும் மதுவுடன் அமர்ந்து சாப்பிடும் உணவகங்கள் அனைத்தும் நாளை முதல் மூடப்படும்.

மது மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கும். மாஹேவில் கரோனா வைரஸ் பாதிப்பால் வயது முதிர்ந்த பெண் ஒருவர் சிகிச்சையில் உள்ளார். கேரளத்தையொட்டியுள்ள மாஹேவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நாளை சுகாதாரத்துறை அமைச்சருடன் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE