மாநிலம் முழுவதும் தயார் நிலைக்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17) காலை, சட்டப்பேரவையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசியதாவது:
"கரோனா வைரஸ் தொடர்பாக அரசு அறிவித்துள்ள 'வருமுன் காப்போம்' நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து திமுகவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அனைத்து நிகழ்ச்சிகளும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,221 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்றாகும். அரசின் சார்பில் அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். நோய் அறிகுறி பற்றி கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.
» பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு: எண்ணிக்கை 189 ஆக உயர்வு
» கரோனா: 100 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்
தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கும் கிங் நிறுவன ஆய்வகம் பரிசோதனை செய்ய வேண்டும். தனியார் ஆய்வகங்களும் இந்த ஆய்வை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஏழை - எளிய மக்களுக்கு அது பயன்படக்கூடிய வகையில் அதற்குரிய கட்டணத்தை, நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.
விமான நிலையங்களுக்கு அருகிலேயே, நோய்க்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி, தங்க வைக்கக்கூடிய மையங்களை அனைத்து மருத்துவ வசதிகளுடனும் உருவாக்கிட வேண்டும். அதில் நாம் தாமதமாக இருக்கிறோமோ என்ற ஒரு அச்சம் இருந்து கொண்டிருக்கிறது. அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளை இதற்குப் பயன்படுத்துவது அவசர காலங்களில் தவிர்க்க முடியாது என்றாலும், இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஒரு மிகப் பெரிய சவாலை நிச்சயம் ஏற்படுத்திவிடும்.
ஆகவே, மக்கள் நடமாட்டம் இல்லாத புறநகர்ப் பகுதியிலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகர் மருத்துவமனைக்கு அருகிலும் இடத்தைத் தேர்வு செய்து, மருத்துவ வசதிகள் அடங்கிய தனிமைப்படுத்தும் மையங்களைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
அரசு மருத்துவமனைகள், ஆய்வகங்கள் போன்றவற்றில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தேவைப்படக்கூடிய அளவுக்கு முகக் கவசங்கள், சானிட்டைசர்கள் உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் உயிரையே பணயம் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறைச்சாலைகள், பொதுமக்கள் அடிக்கடி செல்லக்கூடிய காவல் நிலையங்கள் ஆகிய இடங்களிலும், போக்குவரத்துக் காவலர்களுக்கும் வருமுன் காக்கக்கூடிய தற்காப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டில் இருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கிட அரசு எல்லா வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்து வீடு திரும்புகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆகவே, கரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய நெருக்கடி ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.
அதேபோல், தனியார் மருத்துவமனை உரிமையாளர்களை அழைத்து, அரசு அவர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நிதியை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கி தனியார் மருத்துவமனைகளையும் தயார்படுத்தி வைக்க வேண்டும்.
இதுவரை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த எத்தனை பேருக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள், அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள், பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருப்பவர்கள் எத்தனை பேர், அதில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்க வேண்டும்.
கரோனா வைரஸைத் தடுப்பதில் அரசுக்கு நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தயார் நிலைக்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago