சமூக ஊடகங்களில் கரோனா வைரஸ் வதந்தி: ராஜஸ்தான் சுகாதார ஊழியர் கைது

By பிடிஐ

சமூக ஊடகங்களில் கரோனா வைரஸ் குறித்து போலிச் செய்திகள் வெளியிட்டு வதந்தி பரப்பிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் எனும் கொடிய நோய்த் தொற்று தற்போது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. எனினும், எல்லா மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிலர் இதுகுறித்து பீதியைக் கிளப்பி வருகின்றனர்.

கடந்த வாரம் பிரதமர் மோடி கரோனா வைரஸ் குறித்த வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் தகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் போலிச் செய்திகளைப் பரப்பியதாக ராஜஸ்தானைச் சேர்ந்த சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தவுசா தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பூரன்மால் மீனா கூறுகையில், ''சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பியதற்காக ஊழியர் அனில் டாங்க் தனது சுகாதாரச் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டார்'' என்றார்.

மஹுவா காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் லால் கூறுகையில், ''ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் ஒரு சுகாதார ஊழியர் அனில் டாங்க் போலிச் செய்திகளைப் பரப்பி வந்துள்ளார். இவர் மஹுவா அரசு மருத்துவனையில் மூத்த சிகிச்சை மேற்பார்வையாளராக ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிந்து வந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதியானது என்பது போன்ற தவறான போலிச் செய்திகளை சமூக வலைதளங்களில் அனில் டாங்க் பரப்பி வருவது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து காவல்துறைக்குப் பலரும் புகார் அளித்த நிலையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது. அவர் சுகாதார அதிகாரிகளால் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று காலை அவர் 'பொதுமக்களை தவறான நோக்கத்தோடு தூண்டியது' காரணமாக கைது செய்யப்பட்டார்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE