கரோனா முன்னெச்சரிக்கை: தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏக்கள், பணியாளர்களுக்குப் பரிசோதனை

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா வைரஸால் இந்தியா முழுவதும் தற்போது வரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மார்ச் 16) காலை சட்டப்பேரவை வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிட் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் ஆகியோருக்கும் கோவிட் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எம்எல்ஏக்களின் கார்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE