அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு விரைவில் கரோனா சோதனை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு விரைவில் கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மட்டும் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இதுவரை காய்ச்சல் அறிகுறிகள் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

அதேபோல லண்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ருமேனி பிரதமர் ஓர்பான் தனக்கும் கோவிட்-19 பாதிப்பு இருக்கலாம் என்பதால் தன்னைத்தானே தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ கடந்த 7-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பால்ம் பீச் நகரில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அவர் சந்தித்துப் பேசினார். பிரேசில் அதிபருடன் அவரது தகவல் தொடர்பு செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் அமெரிக்கா சென்றிருந்தார்.

இதில் பாபியோ கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பாபியோ ட்ரம்ப்பிடம் நேரில் பேசியதை அடுத்து, அமெரிக்க அதிபருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வெள்ளை மாளிகை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

எனினும், தனக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறி பரிசோதனை செய்ய, ட்ரம்ப் மறுத்து வந்தார். ''கரோனா அறிகுறி இல்லாத மக்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தனது ஃப்ளோரிடா ரிசார்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ''நான் சோதனை செய்ய மாட்டேன் என்று தெரிவிக்கவில்லை. விரைவில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்வேன் என்றே நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE