கரோனா வைரஸை எதிர்த்துப் போராட இத்தாலி 25 பில்லியன் யூரோ ஒதுக்கீடு

By பிடிஐ

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக 25 பில்லியன் யூரோக்களை (28.3 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் கியூசெப் கோன்டே புதன்கிழமை தெரிவித்தார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவில் கரோனா பாதிப்பின் தாக்கம் முன்பிருந்த வேகத்தை விடக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. எனினும், இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேறெந்த உலக நாடுகளையும்விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரச் சமாளிப்பையும் உறுதி செய்ய அந்நாடு முடிவெடுத்துள்ளது. அதற்காக 25 பில்லியன் யூரோக்களை அந்நாடு ஒதுக்கியுள்ளது. இது அமெரிக்க டாலரில் 28.3 பில்லியன் ஆகும். இந்தியப் பண மதிப்பில் ரூ.208.53 கோடி ஆகும்.

கடந்த வியாழக்கிழமை 7.5 பில்லியன் மட்டுமே யூரோ அவசரகால நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையால் நிதியையும் அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் பின்னர் கூறினர். அவர்கள் கணக்கிட்டதுபோலவே உலகமே எதிர்பாராத வகையில் இத்தாலியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டனர். இதுவரை 631 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகரித்து வரும் சுகாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் பதில் குறித்த கூட்டம் இன்று இத்தாலியத் தலைநகர் ரோமில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு இத்தாலிய பொருளாதார அமைச்சர் ராபர்டோ குவல்டீரி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ''கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாங்கள் 25 பில்லியன் யூரோக்களின் அவசரத் தொகையை ஒதுக்கியுள்ளோம். முழுத் தொகையை உடனடியாகப் பயன்படுத்தப் போவதில்லை. இந்த வளங்களில் பாதியை மட்டுமே தற்போது பயன்படுத்த உள்ளோம். இதற்காக ஒதுக்கப்பட்ட தொகையின் மீதியுள்ள தொகை இருப்பு வைக்கப்படும். இது எதிர்பாராத நிலைகளைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE