கரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?- முழுமையான அலசல்

By க.சே.ரமணி பிரபா தேவி

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, அங்கும் இங்குமாகப் பரவி தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த நபர், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் புது வகை வைரஸான கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் தமிழரின் பாரம்பரியமான, சித்த மருத்துவம் கரோனாவை எப்படிப் பார்க்கிறது?

இதுகுறித்து சித்த மருத்துவர் ஜெரோம் சேவியரிடம் பேசினேன்.

''வைரஸ் என்பது ஒரு வித்தியாசமான படைப்பு. உலகத்தின் மிக நுண்ணிய நச்சுக் கிருமி இது. பாக்டீரியாவை விட 100 மடங்கு சிறியது. உடலின் ஒரு செல் எப்படி இருக்க வேண்டுமோ அந்த ஒத்திசைவில் கூட அமைந்திருக்காது.

உலகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. சில வகை வைரஸ்களை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். சளியை ஏற்படுத்துவதும் வைரஸ்தான். நாய்க்கடியில் உருவாகும் ரேபிஸ், போலியோ, எச்.ஐ.வி போன்ற நோய்களை ஏற்படுத்துவதும் வைரஸ்கள்தான்.

கரோனா வைரஸ், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. வவ்வால்கள் மற்றும் எறும்புத் தின்னிகள் போன்றவற்றில் இருந்து இவை பரவியிருக்கலாம். ஓரிடத்தில் நிலை கொண்டிருக்கும் வைரஸ் பல நாட்களுக்கு அப்படியே இருக்கும். ஒரு செல்லுக்கு நுழையும்போது உயிர் பெற்று இயங்கத் தொடங்கும், வளர ஆரம்பிக்கும். இதனாலேயே ஆரம்பக் காலகட்டங்களில் வைரஸை உயிருள்ள பொருள் என்று வகைப்படுத்துவதா, உயிரற்ற பொருள் என்று சொல்வதா என்ற குழப்பம் விஞ்ஞானிகளிடத்தில் இருந்தது.

12 மணிநேரம் உயிருடன் இருக்கும்
கரோனாவால் பாதிக்கப்பட்டவர் இருமினால், தும்மினால் நீர்த்துளிகள் வெளியே வரும். அவை எதிலாவது பட்டால், 12 மணிநேரம் உயிருடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. கரோனாவைப் பற்றி இப்போது சொல்லக்கூடிய அனைத்துத் தகவல்களும் குறுகிய காலத்தில், அவசரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தெரிவிக்கப்பட்டவை. வைரஸ் குறித்து மட்டுமே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. வைரஸுக்கான மருந்துகள் குறித்த ஆய்வுகள் சீனாவில் மட்டுமே அதிக அளவில் நடந்து வருகின்றன'' என்கிறார் மருத்துவர் ஜெரோம் சேவியர்.

மனிதர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும் அவை வைரஸுக்கு எதிராகப் போராடும் விதம் குறித்தும் சொல்பவர், தனி மனிதர்களின் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே நோய் பாதிப்பும் குணமடைவதற்கான காலமும் இருக்கும் என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, ''பொதுவாக மனிதர்களுக்கு இருவித நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். முதலாவது பிறக்கும்போதே உருவாவது (Innate Immunity), அடுத்தது வளர, வளர ஏற்படுவது (Adaptive Immunity) மண்ணில் விளையாடும்போது, அடிபட்டு கிருமிகள் உள்ளே போய் எதிர்ப்பு சக்தி உருவாவது, சளி, காய்ச்சலால் என கொஞ்சம் கொஞ்சமாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

மனித குலத்தைப் பாதிக்காத வைரஸ்
கரோனா வைரஸ் இத்தனை நாட்கள் வரை வவ்வால்களிடமோ, எறும்புத் தின்னிகளிடமோதான் இருந்தது. இப்போது மனிதர்களுக்கு வந்த பிறகு, முதன்முதலாக நமது உடல் கரோனாவை எதிர்த்துப் போராடுகிறது. அதனால் கரோனா எதிர்ப்பு சக்தி, இனிதான் மனித குலத்துக்கு உருவாகும்.

அதேபோல கரோனாவால் பாதிக்கப்பட்ட அத்தனைப் பேரும் ஒரே மாதிரியான அறிகுறியை எதிர்கொள்ள மாட்டார்கள். உதாரணத்துக்கு 100 பேருக்கு கரோனா வந்தால் 100 பேருக்கும் ஒரே பாதிப்பு ஏற்படாது. நோய்க் கிருமிகளின் தொற்று, உணவு, நோயாளிகளின் உடல்வாகு, உட்கொள்ளும் மருந்துகள், சூழல், வெப்பநிலை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து குணமடையும் போக்கு மாறும்'' என்கிறார் மருத்துவர் ஜெரோம் சேவியர்.

கரோனாவை நிலவேம்புக் குடிநீரால் குணப்படுத்த முடியும், கொதிக்க வைத்த பூண்டு நீர் கரோனாவைப் போக்குகிறது என்றெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்திகள் உலவி வருகின்றன. இதை சித்த மருத்துவர்கள் எப்படிப் பார்க்கின்றனர்?

டெங்கு காய்ச்சலுக்கு அரசே அதிகாரபூர்வமாக நிலவேம்புக் குடிநீரை மருந்தாக அறிவித்தது. அதேபோல கரோனாவைக் குணப்படுத்துவதிலும் சித்த மருத்துவத்தின் பங்கு உள்ளதா? என்னும் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளிக்கிறார் மருத்துவர் சேவியர்.

''கரோனா வைரஸுக்கு என்னிடம் மருந்து இருக்கிறது என்று யாரும் உரிமை கோருவது தவறு. அப்படிப்பட்ட ஆட்கள் சொல்வதை நம்புவதோ, அவர்கள் அளிக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்வதோ கூடாது. அரசு சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும். அல்லது முறையான சித்த மருத்துவர்களிடம் சென்று நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை உட்கொள்ளலாம்.

கரோனாவைப் பொறுத்தவரையில் காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல், களைப்பு, நுரையீரல் பாதிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. சித்த மருத்துவம், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரிக்கிறது. அவற்றை உடலின் வாதம், பித்தம், கபம் என்ற வகைமைகளுக்கு ஏற்ப வாத சுரங்கள், பித்த சுரங்கள், கப சுரங்கள் என்று பிரிக்கலாம்.

கரோனா அறிகுறிகளைப் பார்க்கும்போது அதை கப சுரங்களுக்குக் கீழ் கொண்டு வரலாம். டெங்குவுக்கு 9 வித மருந்துகளைக் கொண்டு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. அதேபோல, கரோனாவுக்கு கப சுரக் குடிநீரைக் கொடுத்துப் பார்க்கலாம். இது 15 விதமான மருந்துகளின் கலவை. (சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுகாஞ்சொறி வேர், அக்ரகாஹாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதோடை, கற்பூரவல்லி, கோஷ்டம், சீந்தில், சிறு தேக்கு, நிலவேம்பு, வட்டத் திருப்பி, முத்தக்காசு)

இந்த மருந்து நிச்சயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். அரசு இதை உடனடியாகப் பரிசோதித்து, அதிகாரபூர்வமாக மக்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் வலியுறுத்துகிறார்.

எந்தவொரு நோய்க்கும் இதுதான் உரிய மருந்து என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? அதை அறிவிப்பதற்கு ஏதேனும் பிரத்யேக முறைகள் இருக்கிறதா என்பது பற்றியும் மருத்துவர் கூறுகிறார்.

இதுதான் நோய், இதுதான் மருந்து
''பொதுவாக ஒரு நோய்க்கான மருந்தை எலி, நாய் போன்ற விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். அது ஜீரணித்து ரத்தத்தில் கலந்த பிறகு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லீரல், சிறுநீரகம், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறதா, ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதா போன்ற பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

விலங்குகளுக்கு எதுவும் ஆகாத பட்சத்தில், ஆரோக்கியமான நபர்களுக்கு மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்ற பிறகே, நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். அதன் பிறகே அதை நோய்க்கான மருந்தாக அறிவிக்க வேண்டும்.

எனினும் சித்த மருந்துகள் அப்படிப்பட்டவை அல்ல. காலங்காலமாக, பல நூற்றாண்டுகளாக கொடுக்கப்பட்டவை. சில மூலிகைகளைக் கலந்து, சிலவற்றை நீக்கி, அளவை அதிகரித்து/ குறைத்துப் பரிசோதனை செய்யப்பட்டவை. அனுபவத்தின் அடிப்படையில் மருந்து கொடுத்து முடிவுக்கு வந்தவை. எனினும், தற்போது நவீன அறிவியலின் கோணத்தில் சித்த மருத்துவ ஆய்வுகள், தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர்

சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய நிறைய மருந்துகள் இருக்கின்றன. தேவைப்படுவோர் உண்மையான சித்த மருத்துவர்களை அணுகி, தங்களின் உடல் வாகுக்கு ஏற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். கோவிட்-19 காய்ச்சலுக்கு கப சுரக் குடிநீரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய பரிந்துரையாக அளிக்கிறேன்.

சுய தனிமைப்படுத்தல்
மக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். முடிந்த அளவுக்கு சினிமா தியேட்டர்கள், கூட்டங்கள், பண்டிகைகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கலாம். இதைப் பயமுறுத்தலாக எடுத்துக் கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைத்துக் கொள்வது நல்லது'' என்கிறார் சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர்.

கரோனா குறித்து சக மக்களிடையே அதீத பீதியையும் ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருக்காமல் தகுந்த முன்னேற்பாடுகளுடன் நடந்துகொள்வோம்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

மேலும்