கரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? - விவேக் கூறும் 5 யோசனைகள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நடிகர் விவேக் யோசனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று விவேக் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

அதில் விவேக் கூறியிருப்பதாவது:

”கரோனா வைரஸ் என்பது இன்று உலகம் முழுக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ்தான். இந்தியாவில் தமிழகத்தில் இப்படியான வெயில் அடிக்கும்போது அந்த கரோனா வைரஸ் என்பது அழிந்துவிடும். அந்த பாதிப்பு நமக்கு இருக்காது.

ஆனாலும், பாதுகாப்பாக மக்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அடிக்கடி கையைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இருமலோ, தும்மலோ வந்தால் கர்சீப்பால் மூக்கையும், வாயையும் மூடிக்கொண்டு இரும வேண்டும், தும்ம வேண்டும். பக்கத்தில் இருப்பவருக்கு இருமலோ, தும்மலோ இருந்தால் அவர்களுடன் நெருங்கிப் பழகக்கூடாது.

அவர்களை மாஸ்க் அணியச் சொல்ல வேண்டும். அனைத்துக்கும் மேல் தமிழக கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறது. கை குலுக்காமல், வணக்கம் சொல்லிப் பழக வேண்டும்”.

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE