| கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை. |
மனித உறவுகள் அற்புதமானது. அது நட்பாக இருக்கட்டும், குடும்ப உறவுகளாக இருக்கட்டும், அந்த உறவுகளின் உணர்வுகளினூடே வாழ்வது என்பது எத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கும். அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. பல்வேறு நெருக்கடி சூழல்களால் அல்லது அறியாத வயதில் வீட்டை விட்டு வெளியேறி தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும் பலரது குமுறல்களும் இந்த உறவுகள் குறித்தானவையாகவே இருக்கும். பல வருடங்கள் கழித்து அவர்கள் தங்கள் உறவுகளை சந்தித்தால் அந்தத் தருணங்கள் எப்படி இருக்கும்? இதைத்தான் 'இட்ஸ் ஒன்லி த எண்ட் ஆஃப் த வேர்ல்டு' திரைப்படம் நமக்கு காட்டுகிறது.
தனது 22 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய லூயிஸ் 12 வருடங்களுக்குப் பின் வீட்டுக்கு வருகிறான். அதுவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் இருந்த அவனது அம்மா, அக்கா, அண்ணன் எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடித்து இருக்கப்போவதில்லை. லூயிஸ் சில நாட்களில் இறக்கப் போகிறான், அதனை தனது குடும்பத்திடம் தெரிவிக்கவே பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கிறான். தான் சொல்ல வந்த செய்தியைச் சொன்னானா? பல வருடங்களுக்கு பின் வந்த மகனுடனான அவர்களது குடும்பத்தின் தருணங்கள் எப்படி இருந்தன என உரையாடல்கள் மூலமும் உணர்வுகளின் மூலமும் நம்மிடையே சொல்கிறார் இயக்குநர் சேவியர் டோலன்.
படம் முழுக்க பாசங்களின் தருணங்களும் நெகிழ்ச்சிகளுமான காட்சிகளாகப் பரவிக் கிடக்கின்றன. 12 வருடங்கள் கழித்து வந்ததும் லூயிஸ் தனது குடும்பத்தின் உறுப்பினர்களைச் சந்திக்கும் காட்சியில் தனது அம்மாவை அடையாளம் காணும் அவனால் மற்றவர்களை அடையாளைம் காண முடியவில்லை. தனது அக்காவையும் அண்ணனையும் அடையாளம் காண முடியாமல் அவர்களுடான தனது பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கிறான். அவர்களை அடையாளம் காண முயற்சித்து தோற்று, பின் அவர்களை தழுவிக்கொள்ளும் காட்சி, லூயிஸை முன் பார்த்திராத அவனது அண்ணியும் அவனுக்காக காத்திருப்பது, லூயிஸ் வந்த பின் அண்ணி நெகிழ்வது என காட்சிக்கு காட்சி உறவுகளின் உணர்வுகளை நம்மிடையே கடத்திக் கொண்டே இருக்கிறார்.
ஆனால், லூயிஸ் தனது இறப்புச் செய்தியைச் சொல்லத்தானே வந்திருக்கிறான். இந்தப் பாசங்களுக்கு இடையே அதனை அவன் சொன்னால் என்னாவாகும் என பதைபதைப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கிடையில் லூயிஸ் ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் (Gay) எனவும் சொல்லப்படுகிறது. குடும்பமே லூயிஸின் மீது பாச மழை பொழிய அவனது அண்ணன் மட்டும் எரிந்து விழுகிறார். அதற்கான காரணம் பின்னால் வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும் அந்த காரணத்தை நாம் புரிந்துகொள்ளும்விதமாக காட்சியமைத்திருக்கிறார் இயக்குநர்.
தனது வீட்டிற்கு வந்த பின் தனது பழைய நினைவுகளை மீட்டெடுக்க போராடுகிறான் லூயிஸ். அவன் என்னதான் யோசித்துப் பார்த்தாலும் சில நினைவுகளைத் தவிர பல விசயங்கள் பிடிபடவில்லை. அவனது அம்மாவும் அக்காவும் அவன் வீட்டில் இருந்தபோது செய்த சம்பவங்களை பேசிக்கொண்டே இருப்பதுடன் அவற்றை திடீரென செய்தும் காட்டுகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் அவனது அண்ணியின் முக பாவனைகளே நெகிழ்வைச் சொல்கின்றன. அதேபோல லூயிஸும் அவனது அம்மாவும் தனியே பேசிக்கொள்ளும் காட்சியை சொல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பின் வந்த மகனிடம் குடும்பத்தின் பொறுப்புகளில் உனக்கும் பங்கிருக்கிறது, நீயும் குடும்பத்தில் நடக்கும் எல்லாவற்றிலும் முடிவுகள் எடுக்க வேண்டும் என அவனிடம் சொல்கிறார் அம்மா. குடும்பம் எனும் அமைப்பின் உணர்வுகள் இங்குதான் இருக்கிறது. குடும்பத்தின் அனைவருக்கும் அதில் பங்கிருக்கிறது.
வேலை, படிப்பு என பல காரணங்களால் அப்பா, அம்மா என குடும்பத்தைப் பிரிந்திருக்கும் பலரும் சில மாதங்கள்கூட அவர்களை பார்க்காமல் இருப்பதில்லை. ஒருசேர பல மாதங்கள் கழித்து வீட்டிற்கு செல்லும் எவராலும் அந்த உணர்ச்சி தருணங்களைப் புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்கையில் 12 வருடங்களுக்கு பின் வரும் மகனைப் பார்க்கும் தாயின் உணர்வுகளும், அக்கா, அண்ணனது உணர்வுகளுமாக நம்மை நெகிழ வைக்கிறது சேவியர் டோலனின் இத்திரைப்படம்.
மீண்டும் வந்த மகன் சில நாட்களில் இறக்கப் போகிறான் என்று தெரிந்தால் என்பதை திரையில் பாருங்கள். 27 வயதேயான இயக்குநர் சேவியர் டோலன் பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு இதனை எடுத்துள்ளார்.
குடும்ப உறவுகளிம் உணர்வுகளினூடே பயணிக்கும் இத்திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) மற்றும் எக்யூமெனிகல் ஜூரி விருது (Ecumenical Jury Award) என இரு விருது பெற்றுள்ளது. மேலும், அடுத்த வருடம் நடைபெறும் 89 ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்ப்டம் பிரிவில் கனடாவின் சார்பாக போட்டியிடுகிறது.
சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago