The Divide (La Fracture) | Dir: Catherine Corsini | France | 2021 | 98' | WC - Santham | 12.30 PM: பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனையை மையமாக வைத்து நடக்கும் கதை. தனிமனிதப் பிரச்சினைகள், ஒரு போராட்டம், இரவுப் பணிகளில் உழைக்கும் சுகாதார ஊழியர்களின் வேலைப்பளு என ஒரே நள்ளிரவில் பல்வேறு பிரச்சினைகள் ஒரே புள்ளியில் மோதுகின்றன. பிரான்ஸ் அரசையே விமர்சிக்கும் ஒரு படம் (2022) கேன்ஸ் விழா போன்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் சொந்தநாட்டிலேயே மிக அரிதாக திரையிடப்பட்டுள்ளதான ஒரு பெருமையும் இதற்கு உண்டு.
வெவ்வேறு உடல்நலப் பிரச்சினைகளில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபடுகின்றனர் பத்தாண்டுகள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்த இணை ஒன்று. எமர்ஜென்ஸி வார்டில் நள்ளிரவில் சந்தித்துக் கொள்ளும்போது மீண்டும் ஏற்படும் எப்போதோ விட்ட இடத்திலிருந்து வாக்குவாதம் தொடர்கிறது. அவர்களுக்குள் அன்பின் புரிதல்களுக்குமான இடமும் ஏற்படுகிறது. மேக்ரோன் அரசை எதிர்த்து வாகன ஓட்டிகள் நகரின் பிரதான சாலைகளில் நடத்தும் மஞ்சள் அங்கி போராட்டம் இன்னொரு பக்கம். போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் மருத்தவமனை நிர்வாகம் இன்னொரு பக்கம்.
கூடவே ஏழை, பணக்காரர் இடதுசாரி, வலதுசாரி, கருப்பு மற்றும் வெள்ளை போன்ற வேறுபாடுகளும் ஆங்காங்கே வெளிப்படுகிறது. மொத்த சிஸ்டமும் படு குழப்பமாகிப்போனதைதான் படு நகைச்சுவையோடு டிவைட் பிரெஞ்சு திரைப்படம் சொல்கிறது. இதற்கிடையில், ஒரு செவிலியர் வாராந்திர ஷிப்டுகளை விதிமுறைகளைப் பற்றி கவலையின்றி சிறப்பாகச் செயல்படுகிறார் என்ற ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர் கேதரீன் கோர்சினி.
» இது அம்மா பாட்டு! - விஜய்யின் ‘வாரிசு’ பட 3-வது பாடல் செவ்வாய்க்கிழமை வெளியீடு
» இது ரீரிலீஸ் காலம் - 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ‘குஷி’ தெலுங்கு வெர்ஷன்
Ann (ANN) | Dir:Ciaran Creagh | Ireland | 2022 | 98' | WC - Seasons | 12.30 PM: அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்ட 2018 வாக்கெடுப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நடந்த ஒரு உண்மைச் சம்பவம். 15 வயது பள்ளி மாணவி குழந்தை பெற்றுக்கொண்டாளா என்று அப்போதே அது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஒற்றைக் கர்ப்பிணிப் பெண்களின் நிலை எவ்வளவு இக்கட்டானது என்பதை வலிமிகுந்த தருணங்களின் காட்சிகளோடு விவரிக்கிறது ஆன் திரைப்படம்.
பதினைந்து வயதான ஆன் லோவெட் ஒரு பள்ளி மாணவி. கிரானார்ட் கிராமத்தில் தனது பெற்றோர் மற்றும் ஏழு உடன்பிறப்புகளுடன் வசிக்கிறார். ஜனவரி 31, 1984 அன்று, ஆன் இன்று ஒரு குழந்தையைப் பெறப் போகிறோம் என்பதை உணர்கிறாள். இரண்டு ஜோடி கத்தரிக்கோலைத் தன் பள்ளிப் பையில் போட்டுக் கொண்டு, எல்லோருக்கும் முன்பாக எழுந்துவிடும் ஆன் வீட்டை விட்டு காலையிலேயே வெளியேறிவிடுகிறாள். ஆனால் அவள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆன் பள்ளிக்கு வரவில்லை என்ற செய்தி பள்ளியை உலுக்குகிறது. கிராமத்தில் பரவுகிறது. ஆனால் பெற்றோர் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
வீட்டிலிருந்து புறப்பட்ட ஆன் எங்கு செல்வது எனத் தெரியாமல் திண்டாடுகிறாள். அவளது தோழி பிரெண்டாவிடம் தேடிச்சென்று அவளிடம் பேசுகிறாள், இலக்கில்லாமல் அலைந்து திரிந்த அந்த மகிழ்ச்சியற்ற சிறுமி இறுதியாக தன் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவு செய்கிறாள். அப்போதுதான் அவள் இரண்டு கத்தரிக்கோல்களையும் பயன்படுத்துகிறாள்.
பல இடங்களிலும் ரத்தப்போக்கு. கடைசியாக ஒரு பெரிய கன்னி மேரி சன்னதிக்கு முன்னால், வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் ஒருவித தனிமையான தோட்டத்தில் எந்த ஆதரவுமற்ற துயரம் மிக்க இந்த சுய பிரசவம் நடைபெறுகிறது. 15 வயதிலேயே சிங்கிள் பேரன்ட் என்ற நிலையை அடைவது துர்பாக்கியமான ஒன்றுதான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது ஆன் அயர்லாந்து திரைப்படம்.
Balaban (Balaban)| Dir: Ysulu Onaran, Kazakhstan, Russia | 2021 | 101' | WC - Six Digrees | 9.15 AM: இரண்டு பெண்கள், உயரடுக்கு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு ஆதரவற்றவர். தன்பாலின ஈர்ப்பில் தனித்துவமான பிணைப்பையும் ஆழமான அன்பையும் கொண்டிருப்பவர்கள். எல்லாவற்றிலுமிருந்து விலகிச் செல்லும் கட்டற்ற சுதந்திரத்தை அவர்கள் விரும்புகிறார்கள். ஊரைவிட்டு அல்ல, கஜகஸ்தான் நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என நினைக்கிறார்கள். தங்கள் புதிய வாழ்க்கைக்கு பாரீஸ் நகரம் உகந்த ஒன்று என்பதால் அங்கே போய்விடுவதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
ஆனால், சூழ்நிலைகள் அவர்களை பின்னுக்கு இழுத்து விடுகின்றன. வெளிநாடு செல்ல பணம் முக்கியமானது என்பதை உணரும் அவர்கள் தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள விலையுயர்ந்த பலாபன் பால்கன் பறவையை திருடும் திட்டத்தை உருவாக்குகிறார்கள். இதனையடுத்து விளைவுகள் சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது.
நிச்சயமாக வளரிளம் பருவத்தின் சிறகு விரிக்கும் கனவின் பாதைகளை பேசமுனைந்த ஒரு படம்தான் இது. ஆனால் நம் வாழ்க்கையில் சிக்கல் எங்கிருந்து வந்து நம்மை தாக்கும் என்பதே நமக்குத் தெரியாது என்பதை சொல்லியும் எச்சரிக்கிறது என்பதுதான் முக்கியமானது. 2006 ஆம் ஆண்டில் நான்கு பொது மருத்துவமனைகளில் கறைபடிந்த ரத்தமாற்றத்தின் காரணமாக 160 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்திதான் இப்படத்தின் அழுத்தமான பின்னணியாக உள்ளது. அந்த உறைய வைக்கும் யதார்த்தத்தை கஜகஸ்தான் நிலப்பரப்புகளின் ஊடே சொல்லியிருக்கிறார்கள்.
Leonor will Never Die (Leonor will Never Die) | Dir: Martika Ramirez Escobar | Philippines | 2022 | 100' | WC - AnnaCinemas | 10.00 AM: ஒன்றைத் தொட்டால் ஒன்பதாக மாறும் கதைக்களம்களில் எப்போதுமே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. பிலிப்பைன்ஸ் படமான 'லியோனர் வில் நெவர் டை' திரைப்படம் அப்படியான ஒன்றுதான். லியோனார் ரெய்ஸ் நடுத்தர வயதுப் பெண்மணி. ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் திரைப்படத் துறையில் பல வெற்றிகரமான ஆக்ஷன் படங்களை உருவாக்கியவர். அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால் இன்றைய கதை வேறு.
லியோனர் மற்றும் அவரது மகன் ரூடி ஆகியோரைக் கொண்ட அவரது குடும்பம் இன்று அன்றாட செலவுகளை நகர்த்தவே சிரமமான நிலை. நாளிதழ் ஒன்றைப் புரட்டும்போது திரைக்கதைகளைத் தேடும் ஒரு விளம்பரத்தை லியோனார் படிக்கிறார். தன்னுடைய பாதியில் விட்ட ஒரு திரைக்கதை ஞாபகம் வருகிறது அவருக்கு. குண்டர்களின் கையில் தனது சகோதரனைக் கொன்றதற்குப் பழிவாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான இளம் கதாநாயகனின் வேட்டையைப் பற்றிய ஒரு முடிக்கப்படாத ஸ்கிரிப்டை லியொனர் தேடி எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார். இதில் இன்னொரு குறுக்கீடாக அவர் மனதில் உள்ள திரைப்பட காட்சிகள் நம் எதிரே ஓடத் தொடங்குவதுதான்.
லியோனாவின் கற்பனை உலகம் அவரை ஒரு விபத்துக்குள்ளாக்குகிறது. கோமா நிலைக்கு சென்ற பிறகும் லியோனரை முழுமையடையாத திரைப்படத்திற்குள் கொண்டு செல்கிறது.. அதை நமக்கும் காட்டுகிறார்கள். கோமா நிலையில் இருக்கும் தனது பயங்கரமான கனவுகளில் நேரடியாக விளையாடி, கதையின் சரியான முடிவை எதிர்நோக்க உற்சாகமாகிறார்.
இதற்கிடையில், காணாமல் போன தனது தாய் எங்கு சென்றார் என்பதைக் கண்டுபிடிக்க ரூடி முற்படுகிறார். வாழ்வின் சலிப்பைப் போக்க இத்தகைய அபத்தங்களும் கொஞ்சம் தேவைதான் என்கிறார் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் இயக்குநர் மார்டிகா ரெமரைஸ் எஸ்கோபர். அதை ஒரு அன்றாட வாழ்க்கை கதையுடன் கூடிய விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் பலம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago