எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு சிறுவயதில் இருந்தே இருக்கும். அதற்காக கடின உழைப்பைக் கொடுத்து நிறைவேற்றவும் முயற்சிப்போம். ஆனால், அத்தகைய வேலைகள் இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலைகளாகவே இருக்கும். சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத வேலைகளை நாம் கனவு காண்பதில்லை. அப்படியான வேலைகளில் ஒன்றுதாம் ரயில் ஓட்டுநர்.
எல்லோருக்கும் ரயிலில் பயணிப்பது பிடிக்கும்தான், ஆனால் அதனை ஓட்டிச்செல்லும் ஓட்டுநரை எப்போதாவது பார்க்க ஆசைப்பட்டிருக்கிறோமா? அநேக நேரங்களில் இல்லை என்பதே பதில். அப்படியான ஒரு ரயில் ஓட்டுநரின் கதையே ட்ரெயின் டிரைவர்ஸ் டைரி.
செர்பியாவில் ஒரு சிறிய பகுதியில் ரயில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார் இலியா. அவரது அப்பாவும் தாத்தாவும் கூட இதே பணியைத்தான் செய்திருக்கின்றனர். இலியா தத்தெடுத்து வளர்க்கும் சிமாவிற்கும் இலியாவைப் போல ரயில் ஓட்டுநராக ஆசை, ஆனால் இலியா அதனை அனுமதிக்கவில்லை. சிமாவை வேறு ஏதோ ஏதோ வேலைக்கெல்லாம் அனுப்பும் இலியா அவனை ரயில் ஓட்டுநராக்குவதில் துளியும் விருப்பமில்லாமல் இருக்கிறார். ஆனால் தனது பிடிவாதத்தால் ரயில் ஓட்டுநராகும் சிமா, அதன்பின் என்ன மாதிரியான மன அழுத்தங்களை எதிர்கொள்கிறான் என்பதை மிலோ ரெடோவிச் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
ரயிலை இயக்குவது என்பது அவ்வளவு சாதரணமில்லை என்பதை படம் நமக்கு புரியவைக்கிறது. முதல் காட்சியிலேயே இலியா தண்டவாளத்தில் குறுக்கே நிற்கும் ஒரு வேனின் மீது ரயிலை ஏற்றிவிட்டு, அதில் இறந்தவர்களின் குடும்பத்திடம் சென்று அவர்கள் மீது ரயில் ஏற்றியது தான்தான் என சொல்லிவிட்டு, மலர் வளையம் வைத்துவிட்டு வரும் காட்சியிலேயே ரகளை தொடங்கி விடுகிறது.
சிமாவைக் கூட தண்டவாளத்தின் குறுக்கே தற்கொலை செய்துகொள்ள வரும்போதுதான் தத்தெடுக்கிறார். சிமாவை ரயில் ஓட்டுநராகக் கூடாது என்பதில் ரொம்பவே பிடிவாதமாக இருக்கும் இலியா, வேரு வழியில்லாமல் அவனுக்கு ஓட்டுநராகத் தேவையான விசயங்களையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். இலியா கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான காரணம்கூட அந்த ரயிலுடனே சமந்தப்பட்டிருக்கிறது.
இலியா எங்கேயும் சிமாவை தன் மகன் என்றோ பேரன் என்றோ சொல்ல மட்டார். ஆனாலும் சிமா மீதான பாசம் அவரை விபரீத முடிவுகளைக் கூட எடுக்க வைக்கிறது. இலியாவுடன் வேலை பார்க்கும் ரயில் ஓட்டுநர்களெல்லாம் சிமாவைச் சந்தித்து பேசும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவஙகளைச் சொல்கின்றனர். தனது பாட்டியின் மீதே ரயில் ஏற்றியது, ஒரு கம்பாட்மண்ட் முழுக்க இருந்த பயணிகள் உயிரிழந்தது என பல சம்பவங்களைச் சொல்லும்போது அதற்கான அழுத்தங்கள் மிக மென்மையாகவே நம்மிடையே இருக்கிறது. இந்த விசயங்களை இவ்வளவு மென்மையாக சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர்.
பிடிவாதத்துடன் ரயில் ஓட்டுநராக வேலையில் சேரும் சிமா அதன்பிறகு அந்த வேலையை மன அழுத்தத்தோடு மேற்கொள்ளும் காட்சிகள் அருமை. அவனால் சரியாக தூங்க முடிவதில்லை, சாப்பிட முடிவதில்லை. ஒவ்வொரு பாலங்களுக்கு அருகிலும் வளைவுகளுக்கு அருகிலும் ரயிலை நிறுத்தி நிறுத்தி யாரேனும் வருகிறார்களா என பார்க்கும் காட்சி ஒன்றே அவனது மன அழுத்தத்தை சொல்கிறது. அதிலிருந்து விடுபட இலியா சொல்வது கூட இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது, ஆனால் அதனைத்தான் செய்தாக வேண்டும்.
ஆயிரக்கணக்கான மக்களை தனக்குள் ஏற்றிக் கொண்டு செல்லும் ரயிலை இயக்குபவர் எப்படியெல்லாம் இருக்கிறார்? அவர் மனநிலை என்ன? நாம் யோசிக்காதவர்களின் வாழ்க்கையை நம் முன் அழகாகச் சொல்கிறார் மிலோ ரெடோவிச்.
ரயில் ஓட்டுநர் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் விபத்துகள் நிகழ்வதை தவிர்க்க முடியாது. அந்த விபத்துகளுக்கு அந்த ரயில் ஓட்டுநர்களும் காரணமாக முடியாது. ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடைபெறும்போது நாம் எல்லோரும் அந்த ரயில் ஓட்டுநரைத்தான் திட்டி தீர்க்கிறோம். அவரது பணிச் சூழலில் இருந்து யோசிக்கும்போது அதன் கடினம் புரியும். அவரும் குற்றவுணர்ச்சியில்தான் தவிப்பார். இப்படியான மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்ததே இந்தத் திரைப்படத்தின் வெற்றி.
இனி நாம் பயணிக்க போகும் ரயிலில் அந்த ஓட்டுநர் எப்படி இருப்பார் என்றாவது யோசிக்க வைக்கும் இந்தத் திரைப்படம்.
2017-ல் நடக்கவிருக்கும் 89-வது ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் செர்பியா நாட்டின் சார்பாக போட்டியிடுகிறது 'ட்ரெயின் டிரைவர்ஸ் டைரி'.
- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago