ஆஸ்கர் செல்லும் ‘செலோ ஷோ’வில் நடித்த சிறுவன் மரணம்

By செய்திப்பிரிவு

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்திப் படமான ‘செலோ ஷோ’வில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் உயிரிழந்தார்.

95-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘செலோ ஷோ’ ( Chhello Show) படம் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ராகுல் கோலி என்ற 10 வயது சிறுவன் மனு என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் இன்று உயிரிழந்தார். சில நாள்களுக்கு முன் கடுமையாக ரத்த வாந்தி எடுத்ததும் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் ராகுல் உயிரிழந்ததாக அவர் தந்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமு கோலியின் தந்தை, "அக்டோபர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ராமு தனது காலை உணவை சாப்பிட்டான். அடுத்த சில மணிநேரங்களில் ராகுல் மூன்று முறை இரத்த வாந்தி எடுத்தார். என் குழந்தை இன்று இல்லை. எங்கள் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மகனின் இறுதிச் சடங்கிற்கு பிறகு அக்டோபர் 14 அன்று வெளியாகும் அவன் நடித்த திரைப்படத்தை நாங்கள் ஒன்றாக பார்ப்போம்'' என தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 14-ம் தேதி இந்தப் படம் குஜராத் மாநிலத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தான் நடித்த படத்தை குடும்பத்துடன் பார்க்க சிறுவன் ஆசைப்பட்டதாக அவரது தந்தை உருக்கமாக கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE